அறிவிப்பாளராக கருணாகரன் பற்றி கலைஞர் கோவிலூர் செல்வராஜன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆசியசேவையில் மலையாள அறிவிப்பாளராக இருந்தவர் அன்புக்கினிய சகோதரர் என்.கருணாகரன் (82) அவர்கள்.அவர் மறைந்த செய்தியை நண்பர் மஹதி ஹசன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திகின்றேன். அமரர் கருணாகரன் அவர்கள் மிக மென்மையான மனிதர்.அவர் மெல்லிசை பாடகராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1982 ஆண்டு என்னிடம் ஒரு பாடல் எழுதி வாங்கி தனது மெல்லிசை நிகழ்ச்சியில் அதை, பாடகி கலாவதி அவர்களுடன் சேர்ந்து பாடினார்.அதை அன்றைய அலுமினிய தட்டில் பதிவு செய்திருந்தோம்.அவர் நினைவாக அந்தபாடல்.
—————————————————————————–

இனியவளே நீ புதியவளே -உன்
இளமையெல்லாம் அள்ளி தருபவளே
சிலமகளே நீ தலைமகளே -என்
சிந்தையில் ஆடிடும் ரதி மகளே

கனவுகளே இன்பக் கனவுகளே
நெஞ்சினில் வாழும் நினைவுகளே
மலைமகளே நான் கலைமகளே -உன்
மனதினில் ஆடிடும் திருமகளே

பொன்மகளே நீ என்னவளே -தென்
பொதிகையில் வளர்ந்த தமிழ் மகளே

இரவுகளே நல் வரவுகளே -நம்
இருவரின் மனங்களில் மோகங்களே

முல்லைகளே வண்ண முத்துக்களே -அவை
நித்தமும் எனது சொத்துக்களே

பாருங்களே எனைப் பாடுங்களே -இன்ப
போதையிலே எனை நாடுங்களே