அழுவது எங்கள் விதியில்லை.

தாய் மொழி வாழ்வைப் பிறமொழி வந்து
கொலையிடும் வஞ்சம் வீழாதா
தமிழரின் நெஞ்சில் தமிழ் மொழி என்றும்
முதல் நிலை கொண்டு ஆளாதா
எந்தையர் காலம் தீந்தமிழ் கோலம்
மாண்மிகு வாழ்வு வாராதா
எம்மை நாம் ஆளும் இன்பமே சூழும்
அந்த நாள் எம்மைச் சேராதா…

அன்றை நாள் தொட்டு கண்கள் தீ மூட்டி
வாழ்ந்த எம் வீர நடை எங்கே
ஆட்சிகள் கூடி ஆணவம் ஏவும்
சூழ்சிகள் தோண்டும் குழி இங்கே
நாளும் அடிமையாய் வாழும் இழிநிலை
நீறு சாம்பலாய்ப் போகாதா
நாமும் மனிதராய் வாழும் உணர்வலை
வாழும் பூமியில் ஆகாதா…

வளங்களும் உண்டு வசந்தமும் உண்டு
இருந்துமே ஏனோ விடிவில்லை
அகதிகள் என்று திசையெல்லாம் நின்று
அழுவது எங்கள் விதியில்லை
மரகத மண்ணில் மகிழ்வுடன் வாழும்
அழகியல் ஏனோ எமக்கில்லை
மனங்களால் கூடி ஒரு கொடி ஏந்தும்
விடுதலை இன்னும் ஏனில்லை….

கலைப்பரிதி.