ஆன்மாவின் சாபம்.…. கவிதை கவிஞர் மணியம்

கந்தகத்தூள் வாகனத்துடன்
கலகலப்பாய் சென்றவரின்
தூல உடம்பு சுக்கு நூறானது.
விடுதலைத் தாகத்தால்
வீறுகொண்டெழுந்து
வெளியேறியது ஆன்மா
காடு மேடெல்லாம் கடந்து
களிப்புடன் மிதந்தது.

எம்; மக்களைக் கொன்றவரை
நான் கொன்றேன்.
என் இனம் விடுதலை பெறும் வரை
நான் சாந்தியடையேன் என
சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது.

ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள்
முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு
தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே
அபிசேகம் செய்த வேளை
பதபதைத்துத் தவித்து
பற்பல ஆன்மாக்கள் கிழம்பின.

எங்கள் தவிப்புப்போல், எங்களை
அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி
எனச் சாபம் போட்டு,
துயிலும் இல்லத்தை
சுற்றிய ஆன்மாக்களைக்
கட்டித் தழுவி தங்கள்
தவிப்பைக் கொட்டியே தீர்த்தன.
.
அமைதியிழந்து அனைத்து ஆன்மாக்களும்
அன்னிய தேசத்துக்குள் அமைதியாய் நுழைந்தன
வீரமறவர் புகழைக் கூறி
மாவீரர் மகிமையை மறக்காமல் ஓதி
தேசத்தின் விடுதலையே எங்கள் சேவை
என்றோர் இல்லம் கண்டு மகிழ்ந்தன.

பணத்தைச் சேர்த்து தன் கணக்கில் போட்டு
பலசரக்கு வியாபாரக் கடைகள் நடத்தி
மாதமொரு மகிழுந்தில் சுற்றித் திரிந்து
மாளிகை வேண்டி மனைவிக்கு அளித்து
தேசியம் பேசிய செயற்பாட்டாளரைக் கண்டு
சஞ்சலப்படன.

பாவிகளே!
எங்கள் பெயரால் பணத்தைச் சேர்த்து
உங்கள் நலனைக் காப்பது முறையா?
சுதந்திரம் என்று மக்களுக்குக் கூறி
சுரண்டுகிறீர்;களே தேசியத் சொத்தை
மாவீரர் சொத்து மரணத்தில் தள்ளும்
மறைக்க நினைத்தால் மனதை உறுத்தும்.
எங்கள் பெயரால் சேர்த்த பணத்தால்
உந்தன் வாழ்வை உயர்த்த நினைத்தால்
ஊனமுற்று அழுந்திச் சாவாய்.
போராளி பெயரால் சேர்த்த பணத்தை
பொதுக்க நினைத்தால் பொல்லாங்;கு நேரும்.
ஊரார் சொத்தை ஒதுக்க எண்ணினால்
உந்தன் சந்ததி ஊனமாய் பிறக்கும்
இருக்கும் வரைக்கும் வசதியாய் வாழ்வோம்
என்று நீ எண்ணினால் தப்பு.
உனக்குப் பின்னால் ஆயிரங் கண்கள்
உற்றுப்;பார்த்து உண்மைக் கதை சொல்லும்
சந்ததி சந்ததியாய் அக்கதை செல்ல
சரித்திரத்தில் நீயும் ஒரு துரோகி
என்பது புரியும்
காசைப் பெருக்குவதே கருத்தாக் கொண்டு
கட்டமைப்பெனக் கதைகள் அளந்து
செயற்பட்டாளரெனச் செப்பித் திரிந்து
செய்த ஊழலை மூடி மறைக்க
புண்பட்டு வந்;த போராளிகளைப்
போக்கிரிகள் என்று புலம்பித் திரிந்தாய்
எட்டி உதைப்பேன் என ஏளனம் செய்து
எதிரிகளைவிடக் கேவலமாய் நடந்தாய்.
விடுதலை என்பதை வியாபாரமாக்கி –எம்
வீரரின் செயலுக்கு அவமானம் செய்தாய்
பதவி பகட்டைக் குறியாய் கொண்டு
பாவனைசெய்து நீ நடிப்பnதெல்லாம்
பாமர மக்களும் புரிந்து கொண்டார்.
உந்தன் தேசியமும் இதுதான் என்ற .
உண்மையும் மக்களுக்கு விரைவில் புரியும்.
வேடங்கள் எல்லாம் கலையும்போது
வேதனையோடு நீ நிலத்திலே புரழ்வாய்
எங்கள் ஈகையை துச்சமாக் கருதிய நீ
என்றும் உலகில் தரித்திரப் படுவாய்
உடலை அழித்து ஆவியாய் அலையும் நாம்
உங்களைச் சும்மா விடமாட்டோம் கேளீர்;!
உயிருடன் இருந்தும் நீ நடைப்பிணம் ஆவீர்.
உயிரை விட்டும் நாங்கள் வாழ்கிறோம் பாரீர்.
உங்களைப்போல் உலகினில் உள்ளோர்
ஊமைச் சனங்களாய் அலைவதைக் காண்பீர்!

கவிதை ஆக்கம் கவிஞர் மணியம் டோட்முண்ட்