இடுகாட்டிலே வைத்தார்கள்

உருகி சிலர்
ஒப்புக்கு பலர்
எல்லாம் கருகி – ஒரு
கைப்பிடி சாம்பலாகும் வரையே..
எப்படியெல்லாம்
அழகழகாய்
பெயர் சொல்லி அழைத்தவர்கள் – உன்னை
நேற்று பிணம் என்று
பெயருமிட்டு
பாடையில் ஏற்றி
ஊர்கோலமாய் தோளில் சுமந்தார்களே..

சந்தி சந்தியாய்
பறையாலே மடை வைத்தார்கள்
எல்லை தாண்டிச் சென்று
இடுகாட்டிலே வைத்தார்கள்
போட்ட வாய்க்கரிசியிலே
விழுந்த ஒற்றை ரூபாவையும்
பிடுங்கி எடுத்தார்களே..

சொல்லி அழைத்த உறவுமுறை
சாவோடு நின்று போனதே
கொள்ளிக் குடம் தோளில்
மூன்று முறை சுற்றி வந்தே போட்டுடைப்பார்
திரும்பி பார்த்திடாது கொள்ளியுமிட்டு போவார்
நேற்றோடு எல்லாம் முடிந்து போனதே
நொடிதனில் நீறாகிப் போவதே மனித வாழ்க்கையடா!!

✍?பவளம்