இதயச் சுவரை எதுக்கு தீண்டுகிறாய்…? 

என் நெஞ்சோரம்
வாடிய பூக்களெல்லாம்
உன் விழிகளில் வழிந்த 
உணர்ச்சி கோடுகளை
வாரி அணைத்துக் கொள்ள
துடிக்கிறதடி

சிலிர்த்துப் போய் கிடக்கும்
நீல வான வெளி எங்கும்
ஒளிக்கீற்றை உமிழும் நிலா கூட
உன் கூந்தல் வளைவுகளில்
வீசும் காற்றின் வாசத்தால்
கொஞ்சம் கொஞ்சமாய்
நாணிப் போகிறதடி

என்ன செய்தாய் நீ
என் உள்ளமெல்லாம்
உன் பெயரை
உச்சரிக்கும் போது படபடத்துக்
கொள்கிறது
விரல்கள் போடும்
கோலமெல்லாம் உன்
வதனத்தின் நிழலாக ஒளிர்கிறது

என்னடி ஆச்சுதென்று
எனக்குள்ளே குருதி ஓடும்
ஒவ்வொரு அணுக்களும்
தன் மீது பூசப்பட்டுக் கிடக்கும்
ரோசா இதழ்களை தொட்டுப்
பார்த்துக் கொள்கிறது
அங்கெல்லாம் நீ மட்டுமே
புன்னகைத்து சிரிக்கிறாய்

இதயச் சுவரை நீ தீண்டும்
அத்தனை பொழுதுகளும்
நித்திரையை தொலைத்து
விட்டுத் தானே உனை
அணைக்க விழிகளைத் திறந்து
காத்திருக்கிறேன்

ஆனால்
கைக்கெட்டா தூரமாய்
காற்றோடு காற்றாக
வானவெளியேறி வந்து
கனவில் மட்டும் என் தூக்கத்தைத்
தட்டி எழுப்பிவிட்டு
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகிறாய்…

இ.இ.கவிமகன்