இளைஞனே சற்று நில் !


ஓ… இளைஞனே நீ செல்வதெங்கே…
வந்த வழி மறந்து விட்டாய்
செல்லும் வழி தொலைத்து விட்டாய்
ஏதேதோ எண்ணங்களில் சிறுமையாக வாழுகின்றாய் !
வீரத்தை உலகுக்கே உணர்தியவர் பூமியிலே
மண்ணுக்காய் மரணித்த மறவர்களின் தேசத்திலே – இன்று
ஓடுகின்ற கூட்டத்தோடு வாளெடுத்து ஓடுகின்றாய்
மதுவுக்கு அடிமையாகி மாதரையும் சீரழிக்கின்றாய் !
உணவின்றி உணர்வுக்காய் உயிரையும் துறந்தார்கள்
எதிரியை போர்முனையில் அலறியோட வைத்தார்கள் – நீயோ
பலபேர் கூட்டாகி அப்பாவியை
பந்தாடி
அராஜகத்தில் அடிமைப்பட்டு அழிவைத்தேடி விரைகின்றாய் !
உன் தந்தையிடம் கேட்டு நீயும்
நம் முந்தையரின் வீரம் படி
வம்பிழுத்து வீதியிலே வீணாக சண்டையிட்டு
அடாவடிகள் புரிவதொன்றும் வீரமில்லை கோழைத்தனம் !
தமிழனை அழிப்பதற்கு தமிழனே வழியென்று
கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கயவர்கள் மகிழ்ச்சியிலே
அறியாமல் ஆடாகி வேள்விக்கு பலியாகி
திட்டமிட்ட சதிக்குள்ளே சிக்குண்டு அழிவதேனோ ?
வா… இளைஞனே அறிவைத் தேடு…
அகிலத்திலே உயர்ந்திட வழியைத் தேடு…
தலைசிறந்த தமிழ் மொழியைப் போற்றிப்பாடு…
தரணிபோற்ற உத்தமனாய் வாழ்ந்து காட்டு !
– வேலணையூர் ரஜிந்தன்.