ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” ஆசி வார்த்தைகளி

ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” திரைப்படம் பெற்றுள்ள ஆசி வார்த்தைகளில் நெகிழ்ந்து போயிருக்கிறேன்……

மதிசுதாவின் „உம்மாண்டி“ முழுநீளத் திரைப்படத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதற்கும், அதை பாராட்டுவதற்கும், அதனை விளம்பரப்படுத்துவதற்கும் எனக்கு ஒரேயொரு காரணம் போதும்.

அது….

„இந்த முழுநீளத் திரைப்படம் வெறும் பத்து இலட்சம் இலங்கை ரூபாயில் செய்யப்பட்டது.“

இதைவிட வேறு பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணம் போதுமானது, ஒரு ஈழம் சினிமா செயற்பாட்டாளனாக நான் உம்மாண்டி திரைப்படத்தை ப்ரமோட் பண்ணுவதற்கு.

ஏனெனில், ஈழம் சினிமா எனப்படுவது கைநிறைய காசோடும், கொட்டிக் கிடக்கும் வசதிகளோடும் செய்யப்படுவதல்ல. மட்டுமட்டான பணத்தோடு, கிடைக்கிற வசதிகளோடு செய்யப்படுவது. அதனூடாக மட்டுமே ஈழம் சினிமா தனித்துவம் பெற முடியும். உலகுக்கு ஒரு புதிய சினிமாவை நாம் அறிமுகம் செய்ய முடியும்.

இந்த „மட்டுமட்டு பண்பாடு“ எமது போராட்டத்தின், போர்க்கால வாழ்க்கையின் தொடர்ச்சியாக வருவது.

நாம் சைக்கிள் டயனமோ மின்சாரத்தில் „வீடியோ படக்காட்சி“ காட்டிய கூட்டம்.

தரப்பால் கொட்டில்களில், அனீஸ்தீசியா இல்லாமலே இருதய சிகிச்சைகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்த நாயகர்களின் வழித் தோன்றல்கள்.

மதிசுதா போர்க்கால மருவத்துறையில் கடமையாற்றியவர். அவருடைய போர்க்கால மருத்துவத்துறை அனுபவம் அவரது படைப்புகள் அனைத்திலும் – அதாவது படைப்புகளை செய்யும் முறைமையில் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கிறது.

எமது சினிமாவுக்கான தனித்துவத்தையும் சர்வதேச தரத்தையும் பலர் எங்கெங்கோ எல்லாம் இருந்து இறக்குமதி செய்ய படாதபாடு படுகின்றனர்.

உண்மையில் போர்க்கால வாழ்க்கை அனுபவங்களிலும் கெரில்லா போர்க்கலைகளிலுமே எமது சினிமாவின் தனித்துவத்துவத்துக்கான சூட்சுமங்கள் புதைந்துள்ளன.

இந்த இரகசியத்தை புரிந்து கொண்டவர் மதிசுதா. அந்த வகையிலேயே மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படமும் அவரது அனைத்து படைப்புகளும் ஈழம் சினிமா முயற்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரும் 28, 29 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில்….

„உம்மாண்டி“

அனுபவத்தை தவற விடாதீர்கள்.

நன்றி – ஞானதாஸ் காசிநாதர்

(படம் – அட்சரம் பவுண்டேசனால் நடாத்தப்பட்ட விருது விழாவில் அவர் கைகளால் போலி குறும்படத்துக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெற்றுக் கொண்ட தருணம்… படத்தில் நந்தலால உட்பட மற்றும் பல படங்களுக்கு கலை இயக்குனராக இருந்த ஓவியர் ட்ரொஸ்கி மருது ஐாயவும் தென்னிந்திய இயக்குனர் கவிதாபாராதியும், இந் நிழற்படமானது