ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா „வேடம்“

ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா பார்த்து பலகாலம் எனலாம் போரின் வடுவை, போர் கொடுத்த துயரை எல்லாம் பேசிய எழுதிய எம்மவர்கள் போர் முடிந்த பின் அதனால் உண்டான வலிகளை பேச துணியவில்லை அல்லது பேசினால் தூரத்தில் வைத்தார்கள் துரோகி என்றார்கள் …

அண்மைய இறுதி ஆண்டுகளாக இந்த பேசுபொருள் பலரை அவன் ஆள், இவன் ஆள், அரசு அனுப்பிய ஆள், என்றெல்லாம் பாகங்களாக பிரித்து பக்குவமாக பங்கு போட்டுக்கொண்டது இடைநிலை குறு நிலை தமிழ்தேசியம் பேசும் உச்ச விசுவாசிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் மன்னர்களால் ….

போராட்ட காலங்களில் உழைத்த உண்மையானவர்கள் போர் ஓய்த பின் மக்களுக்கு வேலை செய்ய தொடங்க,போரை, போராட்டத்தை வைத்து பணம் பார்த்தவர்கள் அன்றும், இன்றும் சரி மாறவே இல்லை அதன் பலனை தங்கள் சுகம்போக வாழ்வுக்கு பயன்படுத்திக்கொண்டு கேள்வி கேட்பவரை „அண்ணை வரட்டும் கொடுக்கிறம்“ என்னும் இந்த நூற்றாண்டின் அரிய வசனத்தை பேசியபடி வாழ்வதை காணலாம் ….

இணைய, சமூக தளங்கள் வந்த பின் பச்சை பாலகர்கள் எல்லாம் அண்ணையின் பெடியன் ஆனது அம்மானின் ரைவர் ஆனதும் தான் வரலாறு நம்முன்னே விட்டுருக்கும் துயரம் ..

போதையில், புகையில் மிதந்து கொண்டு எல்லைப்படையை கூட காண்னால் காணாதவன் எல்லாம் வெளிநாடு வந்து சுயபடம் புலிபோட்டு பெயரை ஈழமாறன் என வைத்து நாடுபிடிக்கும் பக்குவம் விடிய வெறி முறிய மறந்திடும் என்னும் நிலையை பார்த்தபடி போர்களத்தில் சுடுகலன் சுழற்றியவர்கள் எட்டி கடந்து போவதை அவதானித்தால் புரியும் …

இந்த காட்சிகளை கண்டு நித்தம் வெந்து சாகும் முன்னாள் போராளியின் வாழ்வை அவன் சந்திக்கும் மன துயரை புலத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை காட்சியாக விரித்து காறி உமிழ்ந்து இருக்கிறார் இயக்குனர் அமல் …

விஜிதனின் கமரா கைகள் தன் பங்கு கோபத்தை செதுக்கி இறக்கி இருக்கிறது, ஈஸ்வர் குமார் இசையால் மழை தூவானத்தை ரணமாக மாற்றி விட்டு இருக்கிறார் …

நீங்கள் மாறன் அண்ணை தானே என குழந்தை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாது கட்டி அணைத்து உச்சி தடவும் அஜந்தன் முகம் இதயம் உள்ளவர்களின் கண்களில் கண்ணீரை ஓடவிடுகிறது,மீள முடியாத மறக்க முடியாத இறுதி முடிவாக இருக்கும் அந்த கடைசி இரண்டு நிமிடம் மட்டுமே ஒரு தனி குறும்படம் …..

அட இது எல்லாம் பேசி எழுதி களைத்த விஷயம் தானே என்று மனத்தை தேற்றிக்கொண்டாலும் ஓர் சினிமாவாக ஒளி ஒலி வடிவில் விடியோ கட்சியாக திரையில் விரியும் போது அதன் தாக்கம் என்பது வேற அளவில் இருக்கும் என்பதை மிக நேர்த்தியாக சிறப்பாக செய்து முடிந்து இருகிறது #வேடம் படக்குழு ..

ஓர் புதிய கதை சொல்லியை ஈழ சினிமா இழுத்து வந்திருகிறது அதற்கு நாவலர் விருது என்னும் மகுடம் சூட்டி எங்கள் முன் கொண்டு வந்து விட்டுஇருக்கிறது.

வாழ்த்துகள் வேடம் படக்குழு மற்றும் கரம் கொடுத்த அனைவருக்கும்.