ஊருக்கு நான் வாறேன்..

ஊருக்கு நான் வாறேன்..
கோடைவிடுப்புக்கு ஊருக்கு வாறேன்
குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து
தோத்திரம் படிக்க வேண்டுமம்மா
கொத்து கொத்தாய் மல்லிகைச்சரம்
கூந்தலுக்கு சூட வேண்டுமம்மா..
செல்விழுந்த பனை மரங்களும்
செல்லரித்துப்போன புத்தகங்களும்
சன்னங்களால் துளைக்கப்பட்ட
சொந்தங்கள் வாழ்ந்த வீட்டோடு
செல்பி எடுக்க வேண்டுமம்மா..
தூர்ந்துபோன கிணறுகளும்
துலாமிதித்து தண்ணீர் இறைத்த
தாத்தா காலத்துச் பொருட்களும்
தோட்டம் துரவு அழிந்து பற்றைமூடி
தவழ்ந்து திரிந்த என் வீடும்
என் பிள்ளைக்கு காட்ட வேண்டுமம்மா…
பூவரசம் இலையுடுத்து பிப்பீ குழல் ஊதி
மாவிலையும் தோரணமும் கட்டி
மண்ணிலே சமைத்து விளையாடிய
அந்தமாமரத்து நிழலில் உட்கார்ந்து
அந்த நாட்களை மீட்ட வேண்டுமம்மா..
அங்கங்கு தெரிகின்ற குருதிபடிந்த சுவர்களில்
அகாலத்தில் உயிர் துறந்த ஆத்மாக்களுக்கு
அஞ்சலி செலுத்தி கண்ணீரால் அபிஷேகிக்கணுமம்மா
ஆசைகள் ஆயிரமாயிரம் சுமந்து வாறன்
அறுசுவை கறியோடு உன் கைமணம் மாறாத
அச்சாச்சாப்பாடு ஒன்றும் உன் மடியும் போதுமம்மா…
தாயக நினைவோடு
ரதிமோகன்
ஓயாதகவியலைகள்