எங்கே சுதந்திரம் !கவிதை ஜெசுதா யோ

மனிதநேயம் இல்லாத
நம் நாட்டில்
சுதந்திரமே இல்லாத
நம் நாட்டில்
இன்று சுதந்திர தினமாம்
யாருக்கு ??? எதற்காக சுதந்திரம் ??

எங்கே சுதந்திரம்
முள்வேலிக்குள்
முடக்கப்பட்ட எம்மினத்தின்
மூச்சுக்காற்றுக்கே
சுதந்திரம் இல்லாதபோது…!

சுதந்திரம் என்பது
காதால் கேட்டது
மாத்திரமே…!!
பார்த்ததுமில்லை
வாழ்ந்ததுமில்லை …!!

அடிமைச் சாசனத்தில்
எழுதப்பட்ட விதிகளாக
இன்னும் வலிகளைச்சுமந்த
எம்தமிழினம் விடுதலைபெறவில்லை…!

வீதிகளெங்கும்
எங்கள் உறவுகள்
காணாமல் போன
தம் பிள்ளைகளைக்
காணாது தவமாய் தவமிருக்க
எங்கே சுதந்திரம்…?

நீதி இல்லாத நாட்டில்
பணத்துக்கு விலைபோகும்
நம் நாட்டில்
இன்னும் இருக்கிறதா
சுதந்திரம் ??

தேர்தல் என்றால் மட்டுமே
எட்டிப்பார்க்கும் தலைவர்கள்
இருக்கும் நம் நாட்டில்
இருக்கிறதா சுதந்திரம் ??

பட்டம் இல்லாது
பணத்திற்கு பறிபோகும்
பதவிகள் இருக்கும் நம் நாட்டில்
இன்னும் இருக்கிறதா சுதந்திரம் ?

எங்கே இருக்கிறது
கேட்டுச் சொல்லுங்கள்…!!

ஆக்கம் ஜெசுதா யோ