எதுவரை வாழ்க்கை…

விடுகதையானது வாழ்க்கை.
புதிர் போட்டது ஒரு புல்லாங்குழல்.
அந்த மூச்சின் ரீங்காரம்
அம்மா பாசத்தை ஒட்டி வைத்த நிழல்.
அணைப்புக்கும் அழுகைக்கும் இடையே
மானசீகப்பட்டது ஒரு வித சோகம்.
மாரடித்து அழுதது நந்தவனக் குயில்…

எண்ணங்கள் மூட்டிய தீயை
ஏக்கங்கள் மழை பொழிந்து அணைத்தன
எதிரையும் புதிரையும் கண்ணீர் சாடின
எதுவரை போகும் இந்தப் பயணம்
எப்படி உயிர் தீண்டும் இந்த மரணம்
கடவுள் என்ற காட்சியை
கண்மூடி நீதி கேட்டது மனித ஞானம்…

பறவை எச்சம் விழுந்த கல்லாய்
பழி விழுந்த மனங்களின் விசும்பல் கேட்டது
தூர இருந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு
இன்றைய பலம் சொல்லி உயிர் கொன்றது
சடலமாய்க் கிடந்த தர்மத்தின் நெற்றிக்கு
சந்தணம் பூசியது ஆன்மீகக் கை ஒன்று…

உலகில் வரம் பெற்று வந்தோமா?
உணர்வால் பழி தீர்க்கப் பிறந்தோமா?
மனங்களை நிறம் தீட்டிப் பாரத்தோமா?

ஒப்பாரியும் தாலாட்டும் ஒரு தூளியில்
இரட்டைக் குழந்தைகளாய்…
நித்திரையா? நித்திய துயிலா?
உயிர் கேட்கிறது 
மரணத்தின் வாசலில் நின்றபடி…

கலைப்பரிதி.