என்னுயிராய் வந்தென்னை ஏமாற்றிப் போனவர்கள்….

என்னுயிராய் வந்தென்னை
ஏமாற்றிப் போனவர்கள்….

”அழகான என்பேரன்
அச்சாய் என் அவரைப்போல்..!””
-அழகுக்கோனார் மனைவி .
என் அம்மாச்சி முத்தமிட்டாள்.

”செக்கச் செவேலென்று
சின்னாச்சி பெற்றெடுத்தாள்
அழகான ஆண்குழந்தை !“
– உறவினர்கள் மகிழ்ந்தார்கள்!

என்பேரைச் சொல்லி அவன்
இவ்வுலகில் பிறப்பெடுத்தான்!
எடுப்பார் கைப் பொம்மையென
இவ்வுலகை மறந்திருந்தான்!

”தம்பி!” என அழைக்க
அண்ணன்மார் அக்காவும்
”அண்ணா!” என அழைக்க
அழகான தங்கையுமாய்
கூடப் பிறந்தவர்கள்
கொட்டி வைத்த பாசத்தில்
சின்னப் பெடியனாய்
சிரித்து முகம்காட்டி நின்றான்.

மௌ்ள மௌ்ளச் சிறிதாய்
மீசை அரும்புகையில்
விடைபெற்றான் அச்சிறுவன்.
சென்றவன் என்னிடத்தில்
திரும்பிவரவேயில்லை!

உலகம் புரிந்ததென்று
உணர்கின்ற வாலிபனாய்
வேறொருவன் ஒட்டிவந்து
நீதானே நான் என்றான்!
உயிர்கலந்த காதலியாள்
மனையாளாய் வந்தபின்னால்
கூடி மகிழ்ந்து
குழந்தைகளைப் பெற்றுவிட்டு
ஓடி மறைந்தான்
அந்த உற்சாக வாலிபனும்.

அப்பாவாய் மாமாவாய்
தாத்தாவாய் இன்னுமின்னும்
ஆராரோவாக
அவதாரம் இவ்வுடலில்!
எல்லோரும் மௌ்ள மௌ்ள
என்னைவிட்டு நகர்ந்தார்கள்!

நான் என்று உடலெடுத்து
நான் வளர்த்த உருவெல்லாம்
தான் வேறு என்றாகித்
தனியாக விட்டதென்னை!
என்னுயிராய் இருந்தென்னை
ஏமாற்றிவிட்டதெல்லாம்
சொந்த முகமாய் இருந்து
சொல்லாமற் போனவர்தாம்!

இப்போது நான் என்னும்
இக் கிழமும் தானொருநாள்
என்னைத்தனியாக
ஏங்கவிட்டுப் போய்விடுவான்!

மாறுகின்ற பருவத்தில்
வாய்க்கின்ற உருவமெல்லாம்
வேறுவடிவம் கொண்டு
வியப்பாக்கும் வாழ்வுதனை!

எந்த முகமும்
எமக்கு நிரந்தரமில்லை
சொந்த முகம் என்று
சொல்வதற்கும் ஏதுமில்லை!

– இந்துமகேஷ்