என்ன கொடுமையிது !“கவிதை -ஈழத் தென்றல்


பட்டினி சாவுகள் பட்டியல் நீளுதே
பாவிகள் வாழ்வோ பணத்தில் புரளுதே
வெட்டியாய் வழங்கிய வாக்குகள் எல்லாம்
வெறுமனே இன்று காற்றினில் போகுதே

எத்தனை வேள்விகள் எத்தனை சாவுகள்
ஏனிந்த சோதனை சொல்லிடு இறைவா
சுவாசிக்கும் காற்றுக்கும் இடையூறு என்றால்
பிறவிப் பயனே இதுவா இறைவா?

நீர்வளம் வற்றிட ‘மீத்தேன்’ பூதம்
ஆலைகள் பெருகிட சாத்தனின் வேதம்
கேட்பவர் இன்றி உயிர்கள் பலியா
ஏழைகள் வாழ்வில் இதுவே விதியா?

படிப்பென்று வந்தால் ‘நீட்’ எனும் கொடுமை
உயிர்வதை செய்ததே ஈதென்ன கொடுமை
வேலைக்கு உணவும் அறிவுக்கு படிப்பும்
வேண்டியது தானா இவர் செய்த பாவம்..

தன்னிலை மட்டும் நினைப்பவர் வாழ்வில்
தனி ரகம் என்றே சாதிக்கும் திறமை
இறைவா இந்நிலை இன்றே மாற்று
ஏழைகள் வாழ்வில் அமைதி தீபத்தை ஏற்று!

ஆக்கம்-ஈழத் தென்றல்