என்ன பாவம் செய்தேனோ?

ஏமாற்றுப் பேய்களும் ,
நயவஞ்சக நரிகளும் ,
வாழும் இந்த காட்டினிலே ;
மனித வேட்டையாடும்
விலங்குகளும் அலைந்திடும் ;
அழகிய வாழ்க்கைதனை
அவஸ்த்தையுடன் வாழ
என்ன பாவம் செய்தேனோ??

சுயநல வாதிகள் ,
போலி அன்பு மானிடர்
மலிந்திட்ட தெருவிலே
நானும் ஒரு பயணியாய்
கால்களும் பயணமே ,
என்ன பாவம் செய்தேனோ??

லீலை புரிகின்ற
போலிச் சாமியும்
வீரப் பொய்யுரைக்கும்
அரசியல்க் கலப்படமும்
ஏய்த்துப் பிழைத்திடும்
பாவப்பட்ட நாட்டிலே
உய்த்துப் பிழைத்து வாழ
எனக்குமோர் வேசமா?
என்ன பாவம் செய்தேனோ??

உழைப்பையும், உழைப்பவனையும்
சுரண்டிடும் முதலாளி
ஆசைக்கு அடிமையாய்
களவும் கொலையும் ;
பெண்ணிடம் சேட்டையிடும்
காவாலிக் கூட்டமும்
பரந்து செறிந்திட்ட
கறைபட்ட பூமியில்
பாவி நானும் பிறந்திட
என்ன பாவம் செய்தேனோ??

குடும்பமோ நடுத்தெருவில்
குடியோ கடைத்தெருவில்
போதையின் அடிமைகள்
தெருத்தெருவாய் அலைந்திடும் ;
தட்டிக் கேட்கவும்
முடியாவே இல்லையே ;
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழ்கின்றோம் வழியின்றி
என்ன பாவம் செய்தேனோ??

வேலணையூர் ரஜிந்தன் .
——————ஈழம்———————