என் எழுத்துப் பயணத்தில்…. நெஞ்சம் மறப்பதில்லை… -இந்துமகேஷ்

கவிஞர் சு.வி. ஆகிய
சு.வில்வரத்தினம் எனும்
என் இலக்கிய நண்பனுக்கு!

எழுபதுகளின் முதல் ஆண்டு
இளைஞனாய் நான் ஏந்திவந்த
„இதயம்“ –
தமிழ் இலக்கிய மாத இதழ்…

„இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்!“
புரட்சிக் கவி பாரதிதாசனின்
எண்ண வரிகளை
இலட்சிய வரிகளாக்கி
இதயம் துளிர்த்த காலம்…

என்னொத்த இளைஞர்களோடு
என் எழுத்துப் பயணம்..

ஊருக்குள் முகிழ்த்த
எழுத்து முல்லைகளில்
இலக்கிய மணம் வீசிச் சிரித்த
இளைஞனாய் நீ இருந்தாய்..

மு.த. என்னும் எங்கள் ஊர்
மூத்த தமிழ் அறிஞனின்
ஆன்மீகத் தேடலுக்குள்
அரவணைக்கப்பட்ட சிட்டு நீ அப்போது.

ஆயினும்
வீரியம் உன் வார்த்தைகளில்
எண்ணங்களில் எழுத்துக்களில்
விளையாடிக் களிக்கும்.

நீ
இலக்கியகாரனாய்
எழுந்துவந்த வேளையிலே
நானோர் ஜனரஞ்சக எழுத்தாளனாய்
-ஆனால்
இலக்கிய வேட்கையோடு –
எழுந்து நிற்க முயன்றேன்..
அதனால்தான்
“இதயம்!”

புற்றீசல்கள்போல
பொலபொலெனப் புறப்பட்டு
சற்றே சில பொழுதுகளில்
சரிந்துவிழும் ஏடுகளாய்..
எத்தனையோ
அந்த எழுபதுகளில்..

“இதயம்..?”-
துடிப்போடு இயங்கத்
தொடங்கிய பொழுதுகளில்
உன் கவிதைகளும் அதன்
உயிர்த்துடிப்பில் சங்கமமாய்…

ஓராண்டோடு இதயம்
ஓய்வுகொண்ட பின்னர்
நாம் சந்தித்துக்கொண்ட
பொழுதுகள் அதிகமில்லை..

எனினும்…
திசைகள் மாறிய பறவைகளாய் நாம்
தேசங்கள் மாறினோம்..

புலம்பெயர் தேசத்தில் நான்
பூவரசை நாட்டி வைத்த
பொழுதுகளில்

ஊரில் நீ
உயிர்த்தெழும் காலத்திற்காக
உன்
சீரிய பணியைச்
செப்பனிட்டுக் கொண்டிருந்தாய்..

சு.வி. என்னும்
சு தந்திரக் க வி!

மரணம் சுமந்து நாம்
இந்த மண்ணுக்கு வந்தாலும்
மீண்டும் சந்திப்போம் என்ற
விருப்போடே பிரிகின்றோம்!

மரணம் என்று ஏதுமில்லை
என்றும் உயிர்த்திருத்தல்
நம் இயல்பு
அதனால்-
பிரிவதில்லை நாம் என்றும்!

பிறிதொருநாள் –
மீளக் கலந்து
மெய்யன்பைப் பரிமாறி
ஆளும் தமிழின்
அழகை ரசிப்பதற்கு
ஒன்றிணைவோம்
அதுவரையில்
ஓய்வுபெறு.

சந்திப்போம்!

உனது அன்பில் கலந்த
இந்துமகேஷ்.
————————————-