எரியும் நினைவுகள்….

காலப்பதிவுகளை
பொதுவாகக் கட்டிக்காக்க
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தோற்றம் பெற்ற நல் நிலையங்களே
நூலகங்கள்!!!!
அதற்கீடாக நம் மூத்தோர்
க.மு.செல்லப்பாவுடன்
நீதிபதிஐசாக் தம்பையா
மாநகர முதல்வர் சாம் சபாபதி
வண.தந்தை லோங் அடிகளார்
கொண்ட குழுவின்
கடின உழைப்பில் கருக்கொண்டது
யாழ் நூலகம்!!!
திராவிடரின் கட்டடக்கலை
பாணியிலே எசு்ஆர். இரங்கநாதன்
வரைபடம் வரைய
கே.நரசிம்மன் வடிவமைக்க
அல்பிரட் துரையப்பா அவர்கள்
திறந்து வைக்க உலகறிய
மிளிர்ந்து நன்னடை போட்டது
யாழ் நூலகம்!!!!
பெறுமதியான நூல்களும்
பெருமையான நூல்களும்
ஓலைச்சுவடிகளும்
கையெழுத்துப்படிகளும்
வரலாற்று ஆவணங்களும்
வகைவகையாய் உரம் சேர்க்க
தென்கிழக்காசியாவில்
சிறந்த நூலகமாயிற்று
யாழ் நூலகம்….
தமிழர் கல்வியில் மிடுக்கோடு
துணை சேர்த்த அகத்தை
நாசமாக்கும் எண்ணத்தில்
தீயிட்டது சிங்களக்காடைகள்
சாம்பராகிய பின்னும்
மனநிறைவு கொள்ளா
சிங்களக் குண்டர்கள்
மறுநாளும் ்தீயிட்டு
சுடுகாடாக்கிய நாள்
ஈழத்தமிழர் வாழ்வில்
கடை பறிந்தநாள்…
„நூலக எரிவு „என செய்தி
கேட்ட அருட்தந்தை தாவீது அடிகளார்
தன்உயிர் துறக்க
„சாம்பல் மேட்டிலிருந்து ஒரு நூலகம்“
„ஒரு நூலகப் படுகொலை „
என நாளிதழ்கள் கண்ணீர்
வடித்தன….
தமிழ்நெஞ்சங்களில் உறைந்த
நல்லதோர் களஞ்சியத்தை
அழித்துவிட்ட (31.05.1981)
துக்கநாளை வாணாளில்
மறந்து விட முடியாது
உருவெடுக்கிறது எரியும்
நினைவுகள்!!!!

 

கௌரி மூர்த்தி கண்ணன்