ஒரு நிமிசம் நில்லுங்கள் …!கவிதை இரத்தினம் கவிமகன்

 

ஒரு நிமிசம் நில்லுங்கள்
என்னை ஒரு தடவை
திரும்பிப் பார்த்து செல்லுங்கள்
என் இறுதிக் கணங்களை
புனிதமான மண்ணுக்காய்
நான் முத்தமிட்டேன்
புயலென வீசிய தமிழீழ
காற்றின் ஒரு வீச்சாகி
நான் கலந்தேன்
உங்களுக்காக என்
உடம்பை புண்ணாக்கி
வலி சுமந்தேன்
அப்போது தெரியவில்லை
முள்ளிவாய்க்காலும்
உங்கள் வாழ்வில்
கடந்து சென்ற ஒரு
மைல் கல் என்று
இப்போதும் என்னால்
உங்களை கடந்து
செல்ல முடியவில்லை
நீங்கள் கடந்து
சென்று விட்டீர்கள்
நந்திக் கடலும்
முல்லை மண்ணும்
ஏந்தி நனைந்த
குருதி நிறத்தை நீங்கள்
மறந்தே போனீர்கள்
அதனால்தான்
நான் கிடக்கும்
முட் படுக்கையில்
இன்றும் முனகுகிறேன்
நீங்கள் உங்களின் நர்த்தன
அரங்கேற்ற மேடையாக்கி
என் உடலை தீண்டுகிறீர்கள்
அழுகிக் கொண்டிருக்கும்
என் உடலின் புண்களை
மீண்டும் குத்தி கிழித்து
வலி தந்து சிரிக்கிறீர்கள்
சிரியுங்கள்
மகிழுங்கள்
அதற்காக தானே
வலிபட்டு நான் துடிக்கிறேன்
ஆனால்
நினைவிருத்துங்கள்
நீங்கள் கடக்கும்
என் உடலம்
உங்களுக்கான செய்தி அல்ல
உங்களுக்காக எழுதப்பட்ட
இன வரலாறு…

ஆக்கம் இரத்தினம் கவிமகன்