கருமேகம் விலகிடுமா…?!கவிதை கவிஞர் ரதிமோகன்

காதலென்ற கண்ணாடியை
உடைத்தெறிந்து வீசிவிட்டு
உள்ளத்தை கீறி கிழித்து
உவகைகொள்ளும் உள்ளங்களில்
உபாதையா இல்லை போதையா..?

கவிழ்த்துவிட்டு சாய்த்துவிட
காரிகைகளின் மனதென்ன
கபடி ஆடும் மைதானமா.. ? இல்லை
கூவி அழைத்து விலை பேசும்
கல்யாணச்சந்தை வியாபாரமா…?

பெண்அங்கங்கள் அந்தரங்கங்கள்
அலங்கோலப் பார்வையில்
அவையேறும் கோலங்கள் கண்டு
அடுக்காத அணங்குகளின் வாய்களும்
முடக்கப்பட்டு சமுதாய வலையினால்
பிடிக்கப்பட்டவர்களா..?

கழுத்திற்கு சுருக்குகயிறும்தந்து
காஸ் அடுப்பென்றும் அசிற்
வீச்சென்றும் கொன்றொழிக்கும் புதியகலாச்சாரப்பாணியில்
வாழ்வியலுக்கு வேதாந்தம் பேசும்
நவீன புத்தர்களின் உலகமா..?

விட்டில் பூச்சி ஏமாளிகளாய்
வில்லங்கத்திற்குள் சிறையாக
விடியாத இரவுகளுக்காய் தினம்
விழிநீர் சொரிந்திடும் வஞ்சியர்வாழ்வை
போர்த்திய கருமேகம் விலகிடுமா …?

கேள்விக்கணையோடு பெண்களின்
குரலாக…

ஆக்கம் ரதிமோகன்