கவிஞை ஜெசுதா.யோ பற்றி மூத்தகலைஞர் தயாநிதி!

வாழ்த்துவோம் வாருங்கள்.
…………………………………………
திருமதி எஸ்.பாலகாந்தன்.
கவிதாயினி.
லண்டன்..

தமிழீழப் படைப்பாளிகள் பலர் ஈழப் போரின் வலிகளால் விளைந்தவர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை என்பது தான் நிதர்சனம்.ஒவ்வொரு படைப்பாளிகளையும் ஏதோ ஒரு வகையில் கட்டவிழ்த்த அராஜகம் கொடுமைப்படுத்திட தவறவில்லை..அந்த வகையில் திருமதி.எஸ் பாலகாந்தனின் தந்தையாரையும் போர் தின்று ஏப்பம் விட்ட நிலையில் வலிகளோடு தமிழையும் சுமந்திட மறக்கவில்லை.
தமிழ் எங்கள் உயிரினும் மேல் என்ற தாரக மந்திரத்தோடு தனது 13 வது வயதினில் அவலங்களை வடித்திட எழுது கலம் பிடித்தவர் தான் இவர்.அழகிய வன்னி நிலப்பரப்பில் வளங்கள் பல கொழிக்கும் வவுனியாவில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடக்கியவரை இடப் பெயர்வு அடிக்கடி விரட்டாமல் விட்டதில்லை. பருத்தித்துறைக்கு நகர்ந்தவர் அங்கே வட இந்து பெண்கள் பாடசாலையில் கல்வியைத் தொடர்கின்றார்.அங்கும் அவரால் நிலைத்து நிற்க முடியாமல் கல்விச் சுமைகளோடு மீண்டும் ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் மேற் படிப்பினைத் தொடர்ந்தவருக்கு இடர்களும் இன்னல்களும் இடைவிடாது துன்புறுத்த 1999 இல் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த அண்ணணிடம் வந்து தஞ்சமடைகின்றார். புதிய நாடு புதிய சூழல் புதிய மொழி பழக்கப்படும் வரை இவரது பேனாவும் சிறிது காலம் மௌனித்துக் கொள்கின்றது.
என் இனிய தமிழ் சிதைந்து விடல் ஆகாது எனும் பெரு நோக்கோடு அங்கு இயங்கி வந்த பாடசாலையில் 2007 இல் ஆசிரியராக இணைந்து கொண்டார்.அந்த ஆத்ம திருப்தியுடன். தனது எழுத்துப் பணியையும் மீள ஆரம்பித்தவர் ஜெசுதா.யோ. எனும் புனை பெயரோடு தனது ஆக்கங்களை பத்திரிகைகள்.சஞ்சிகைகள் இணையங்கள் வானொலிகள் என எழுதி வந்தவருக்கு முகநூல் வருகை பெரும் துணையானது. பல நூறு கவிதைகளை வேகமுடன் எழுதி வந்தவர் உலகளாவிய ரீதியில் முகநூல் குழுமங்களினால் நடாத்தப்படும் கவிதைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களோடு விருதுகளையும் சுவீகரித்துள்ளார்..
எங்கள் தமிழ் ஈழப் போர் பல பெண்களை அடையாளப் படுத்த தவறி விடவில்லை .சுடுகலனுடன் எதிரிகளை விரட்ட எல்லைகளில் நின்று போராடிய வரலாற்றுச் சாதணைகளுடன் படைப்பாளிகளாகவும் தம்மை முன்னிலைப் படுத்தியவர்களில் ஜெசுதா.யோவும் ஒருவராகின்றார். தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து உயிர் வலி எனும் பெயரிட்டு அண்மையில் தாயகத்திலேயே வெளியீடு செய்த பெருமைக்குரியவராகின்றார்…தன்னால் படைக்கப் பட்ட உயிர் வலியின் தொகுப்பினை சித்திரை மாதம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் லண்டன் மாநகரத்தில் அறிமுக விழா நடாத்த திட்டமுட்டுள்ளார் என்ற இனிய தகவலையும் லண்டன் வாழ் முக நூல் சொந்தங்களக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உரமும் இட வேண்டியது எங்கள் தார்மீகக் கடனாகும். ஒவ்வொரு ஆக்கங்களூம் எங்கள் கண்ணீர் சுமந்த வரலாறாகும் இவை ஆவணமயப்படுத்தல் அவசியமாகின்றது.எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய சொத்துக்கள் இத்தகைய வரலாற்றுப் பதிவுகளே என்பதனை உணர்ந்தவர்களாக செயல் படுவது காலத்தின் கட்டாயமாகின்றது..
வாரி அணைத்துக் கொண்ட இயந்திர வாழ்வில் திருமதி எஸ்.பாலகாந்தன் இருபிள்ளைகளின் தாயாகி பலவிதமான பணிச் சுமைகளோடும் நிறைந்த பற்றுதலோடு நேரத்தை அட்டவணைப் படுத்தி எழுத்துத் துறையிலும் மிகவும் தீவரமாக இயங்கி வருகின்றார் வெகு விரைவில் இவரது இரண்டாவது நூலாகி கல்லறைப்பூக்கள் எங்கள் காவல் தெய்வங்களான மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்த படி வெளி வர இருப்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இவரின் ஆற்றலையும். தமிழ் நேசிப்பையும் . பாராட்டி வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே. முடிந்தவரை முகநூலினால் மூச்சுக் கொடுப்போம். வாழிய வாழியவே