காதலில் இதுவெல்லாம் சகஜமப்பா….

கால வெளிகளைக் கடந்து
காதல் மொழியில் கவிதை பாடுகிறது
சிவப்பு ரோஜா நிறப் பட்டாம்பூச்சி.
சித்திரம் கீறிய 
வெட்டும் விழிகளின் இமைகள்
கவிதையை உயிராக்கிக் கொண்டது.
இராத்திரி பூத்த விண் பூக்கள்
சாத்திரம் சொன்னது
அவள் உனக்கெனப் பிறந்தவெளென்று…

ஒரேயொரு புன்னகையில்
பிரபஞ்ச வெளியை 
சிறகின்றிக் கடந்தது காதல் உயிர்.
மூச்சு மூக்குளித்து
ஆழத்தின் மச்சத்தில் முத்தமிட்டது.
உச்சந்தலையில் வெந்நீர் பட்டும்
உச்சி குளிர்ந்து தான் மாயம்.

சந்தணக் கிண்ணத்தில்
நேத்தியின் பிரகாரம்
தேகம் உருண்டது.
வயதுக்கு வந்த குறுத்தோலை
காவோலையின் அனுபவம் பேசியது.
காதலுக்குள் இதுவெல்லாம் சகஜமப்பா…

கண் ஜாடையால் படர்ந்த பாலாடையை
அள்ளியுண்டு பருவம் திரண்டது.
நெருப்புக்குள் படுத்திருந்து
வயது குளிருக்கு போர்வை கேட்டது.
சொற்களைக் கோர்த்து ஒத்திகை செய்த
மயக்க விழிகளின் வெட்கச் சாரல்கள்
முத்தங்களை இலக்கியமாக்கி
புத்தகங்கள் எழுதின…

எல்லாம் நடக்கும் 
எதையும் கடக்கும்
காதல் மனது 
கடவுளையும் படைக்கும்…

கலைப்பரிதி.