காதலி -இந்துமகேஷ்

வேலைக்குப் போய்விட்டு வந்த களைப்புத் தீர ஒரு சின்னக் குளியல் போட்டுவிட்டு
மனைவியின் கைச் சமையலில் ஒரு பிடி பிடித்துவிட்டு சற்றுக் கண்ணயர்ந்து எழுந்து மற்ற அலுவல்களைப் பார்க்கும் சச்சிதானந்தன் இன்று வழக்கத்திற்கு மாறாகச் சோர்ந்திருந்தார். ஐம்பதிலும் சின்னப்பெடியன் மாதிரி சுறுசுறுவென்றிருக்கும் கணவர் இப்போதிருக்கும் நிலையைப் பார்க்க கமலாவதிக்கு கஷ்டமாயிருந்தது.
„என்னப்பா?“
„ஒண்டுமில்லை!“
„நீங்கள் ஒண்டுமில்லை எண்டால் ஏதோ இருக்குதெண்டு அர்த்தம்!“
அவள் அவரருகில் போய் உட்கார்ந்து அவரது தோளில் தலைசாய்த்தாள்.
அவரது மார்பைத் தன் கைவிரல்களால் வருடிக்கொண்டே மெதுவாகக் கேட்டாள் :
„என்னப்பா….வேலை இடத்திலை ஏதும் பிரச்சினையே?“
“அதுதான் ஒண்டுமில்லை என்கிறனே!“ சற்றுச் சினத்தோடு சொன்னார் அவர்.
ஒருநாளுமில்லாத அவரது கோபத்தில் கமலாவதிக்கு ஆச்சரியம் வந்தது.
„என்னவோ நடந்திருக்குது!“

இந்த இருபத்தைந்து வருடத் தாம்பத்தியத்தில் அவரைப்பற்றி அவளுக்குத் தெரியாது எந்த இரகசியமும் இல்லை. கொஞ்சநேரம் கழித்து அவர் வழிக்கு வருவார்.
பொறுத்திருந்தாள்.

இரவு விளக்கை அணைத்துவிட்டு படுத்த பிறகும் தூக்கம் வராமல் அவர் புரண்டு கொண்டிருந்தார்.
„எல்லாத்தையும் உங்கடை மனசுக்குள்ளையே வைத்து புலம்பினாப்போல உங்கடை பிரச்சனையள் தீர்ந்திடுமே?“ அவள் வார்த்தைகளால் தூண்டிலிட்டாள்.
மெதுவாக அவரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
„நாங்கள் எதை விதைக்கிறமோ…அதுதானை முளைக்கும்!“
„என்னத்தை விதைச்சீங்கள்… என்ன முளைச்சுது?“
„காதல்.. காதலை விதைச்சன் அது இப்ப முளைக்குது!“
„ இந்த வயசிலை திரும்பவும் காதலோ?“
„என்னைவிட்டுப்போட்டு இன்னொருத்தியையோ?“
பொய்க்கோபம கலந்த கிண்டலுடன் கேட்டாள் கமலாவதி.
„விசர்க்கதை கதைக்காதை!“ என்றார் அவர்.
„உண்மை தெரிஞ்சால் நீயும் என்னைப்போலத்தான் தவிப்பாய்!“
“என்னெண்டுதான் சொல்லுங்கோவன்!“
„உன்ரை பெடியன் ஆரையோ காதலிக்கிறான்… எவளோ ஒரு வெளிநாட்டுக்காரியை!“
கமலாவதி இப்போது அதிர்ந்துதான் போனாள்:
“விசர்க்கதை..என்ரை பிள்ளை அப்பிடி இல்லை!“
„நம்பிககொண்டிரு…. இண்டைக்கு நான் வேலை முடிஞ்சு வாறபோது அவனையும் அந்தப் பெட்டையையும் ஒண்டாய்க் கண்டன்!“
„ஐயோ..!“ என்றாள் அவள்.
சட்டெனப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு தலைமாட்டிலிருந்த மின்விளக்கை எரியவிட்டாள்:

வெளிச்சத்தில் கணவனின் முகத்தைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.
அவரது கண்களின் ஓரம் கண்ணீரைக் கண்டதும் மனம் பதறிற்று.
தன் பதட்டத்தை மறைத்தாள்.
„என்னப்பா இது.. இதுக்கேன் கவலைப்படுறீங்கள்… காலா காலத்துக்கு நாங்கள் செய்யவேண்டியதைச் செய்திருந்தால் இப்பிடி வந்திருக்குமா?“
„என்ன செய்யச் சொல்கிறாய்? இப்பதானை அவனுக்கு இருபத்திநாலு வயசு. இப்பதான் படிப்பை முடிச்சுக்கொண்டு ஏதோ வேலை எண்டு தொடங்கியிருக்கிறான்!“
„காதல் வாறதுக்கு காலநேரம் இருக்குதே அப்பா… உங்களின்ரை இருபத்துநாலு வயசிலை நீங்கள் என்ன செய்தனீங்கள்?“
அவள் அதைச் சொன்னபோது அவளது முகத்தில் மெள்ளப் படர்ந்த வெட்கத்தில் இவள் நாற்பத்தைந்து வயசுக்காரி என்பது அவருக்கு மறந்துபோயிற்று.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அவரை மயக்கிய கமலாவதியாகத் தெரிந்தாள் அவள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இறக்கைகட்டியது மனது.

 

அகப்பட்டு விட்டது!
யாருக்கும் தெரியாமல் கமலாவதிக்கு சச்சிதானந்தன் கொடுத்த ஒரு காதல் கடிதம்.
அடிக்கடி அவளைச் சந்தித்து ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவள்மீது தன் அன்பையெல்லாம் அள்ளிக்கொட்டி தனக்குத்தெரிந்த இனிமையான தமிழ் வார்த்தைகளில் தோய்த்து தோய்த்து அவர் அவளுக்கென்று புனைந்த மடல் அது.

„நீயின்றி நானில்லை!“ என்ற வாசகத்தைமட்டும் அதிகமாய் எழுதி அடிக்கோடிட்டு அவர் வரைந்திருந்த வரிகள் கமலாவதியின் அப்பாவுக்கு ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் மூட்டிவிட அவர் அநாகரீகமாக நடுவீதியில் வந்து நின்று கூச்சல் போட,…
„காதல் கேட்குதோ காதல்… கழிசடை நாய்கள்… ஒரு பெண்பிள்ளையைத் தனிய அனுப்பினாக் காணும்… கழுதையள் எல்லாம் காதல் காயிதத்தோடை வந்து சவாரி விடுகுதுகள்!“

சச்சிதானந்தனின் அப்பா மரியாதைக்குப் பயந்தவர். மரியாதையானவர்
ஓடிவந்து கமலாவதியின் அப்பாவின் கையைப்பற்றிக் கொண்டார்.
„சரி சரி.. சின்னஞ்சிறுசுகள்.. விடும்…!“
„என்னது… விடுகிறதோ..? உமக்கென்ன காணும்… நீர் ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்து வைச்சிருக்கிறீர்… நான் நாலு பெட்டையளைப் பெத்தனான்…“
„அதாலை என்ன இப்ப உன்ரை மோளுக்கு விருப்பமில்லாட்டில் சொல்லட்டுக்கும் என்ரை பெடியன் விட்டது பிழைதான் எண்டு நான் எல்லாருக்கு முன்னாலையும் மன்னிப்புக் கேட்கிறன்!“

அப்பா இப்படி இறங்கிப் போயிருக்க வேணாமே என்று சச்சிதானந்தன் நினைத்தாலும் அவர் எதையும் நியாய பூர்வமாகத்தான் சிந்திப்பார் என்பதில் அமைதியாயிருந்தான்.
கூட்டம் கூடி விட்டது.
„உன்ரை மோளைக் கூப்பிடும்!“

கமலாவதி பயந்த விழிகளுடன் வெளியில் வந்தாள்.
„சொல்லடி உனக்கு இவனிலை விருப்பம் இல்லையெல்லே?“
கமலாவதி மிரண்ட விழிகளால் தகப்பனைப் பார்த்தாள். பிறகு சச்சிதானந்தனின் அப்பாவைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் தேங்கியது.
தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகச் சொன்னாள்:
„பிழை என்னிலையும்தான்… நானும் அவரை உயிருக்குயிராய்க் காதலிக்கிறன்.. அவரில்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை!“
„எடியேய்..!“ என்று பாய்ந்து மகளை அடிக்க ஓடிய அப்பன்காரனைக் குறுக்கே போய் நின்று தடுத்தார் சச்சிதானந்தனின் அப்பா.
„அவளைத் தொடாதை…அவளை என்ரை மருமகளாக்கிறதா நான்முடிவெடுத்திட்டன்!“

கமலாவதி அவரின் காலில் விழுந்தாள்.
நல்லநாள் பார்த்து திருமணம் முடிந்தது.
முதலிரவில் சச்சிதானந்தன் கேட்டான்:
„எங்களின்ரை கலியாணத்துக்கு உன்ரை அப்பா சம்மதிக்காட்டில் என்ன செய்திருப்பாய்?“
„செத்திருப்பேன்!“ என்றாள் கமலாவதி ஒரே வார்த்தையில்!
சச்சிதானந்தன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

000

விடிந்து வேலைக்கு ஆயத்தமானபோது அந்தச் செய்தி வந்தது.
கமலாவதி அலறினாள்.
„என்னப்பா எங்கடை பிள்ளைக்கு ஏதோ அக்சிடெண்டாம். கிறங்கன்கவுசிலையிருந்து போன் வந்திருக்குது!“
பதறியபடி அவர்கள் இருவரும் புறப்பட்டுப்போனபோது அவர்களது மகனுக்கும் அந்தப் பெட்டைக்கும் அவசரசிகிச்சை நடந்து முடிந்திருந்தது. இரவு அவர்கள் காரில் போயக்கொண்டிருந்தபோது நடந்த விபத்து. அவள் அபாயகரமான நிலையைத் தாண்டியிருந்தாள்.

மயக்க நிலையிலும் அவனது வாய் அவளது பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தது.
„என்னப்பா… எங்கடை பிள்ளை..?“ கமலாவதி சச்சிதானந்தரின் நெஞ்சில் முகம்புதைத்து விம்மினாள்.
அவளது தலையை வருடிவிட்டுக்கொண்டே அவர் சொன்னார்:
„அழாதை… எஙகடை பிள்ளையளுக்கு ஒரு குறையும் வராது!“

மருமகளாக அவளை ஏற்க அவர் மனம் தயாராகியிருந்தது.