குயிலின் கீதமிது…கவிதை கவிஞர் ரதிமோகன்

கும்மிருட்டில் நிசப்தத்தை கிழித்து
கருங்குயில் தனிமையில் பாடியது
கொட்டும் மழைக்கு மேளதாளமாய்
இடியோடு மின்னல் பிரசன்னமாக

சங்கீதகச்சேரிக்கு ஒத்திகையாம்
குயில்பாட்டிற்கு எதிர்பாட்டெடுக்கும்
ஆந்தைகளும் தவளைகளும்
ஏழு ஸ்வரங்களில் பாடல் படிக்க..

வெகுண்டெழுந்த வாரண அணியின்
பிளிறலில் பேய்களும் ஓடி ஒளிய
மரம் விட்டு மரம் தாவும் வானரங்கள்
மனம் விட்டு மனம் தாவும் மனிதர்போல்

கைகலப்பிற்குள் கதிகலங்கியது வனம்
குயிலின் கீதம் மட்டும் ஓயவில்லை
கூட்டிற்காக போராடும் அவலத்தை
பாட்டிலே படித்த போதும் அதை
கேட்கும் நிலையில் எவருமே இல்லை…

ஆக்கம் ரதிமோகன்