கோவெல்லூர் செல்வாராஜா  :கே.ரி.செல்வலிங்கம் பற்றிய நினைவுப் பதிவு.

கே.ரி.செல்வலிங்கம் என்ற மெல்லிசைப் பாடகர், இப்பொழுது ஜெர்மனியில் இருக்கின்றார். எங்கள் தாய் வானொலியில் 30 வருடங்களுக்கு முன்னர் பாடகர் கே.ரி செல்வலிங்கம் அவர்களுக்கு மெல்லிசைப் பாடல்கள் ஒலிப்பதிவு வந்தது. மூன்று பாடல்கள் தேவை. இருந்ததோ இரண்டு பாடல்கள். உடனே நான் ஒரு பாடல் எழுதிக் கொடுத்தேன். மீனவர் பற்றிய பாடல். அந்தப் பாடல் இது. மிக அற்புதமாக பாடினார் செல்வலிங்கம். மிகநீண்டகாலத்திற்கு பின்னர், 2004ம்ஆண்டு,எஸ்.கே.ராஜென்,சிவா ஆகியோர் ஏற்பாட்டில் லண்டனில் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா நடந்தது. அதில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். ஹமீட் அண்ணா பற்றி ஒரு பாடலும் எழுதிப் பாடினேன். அந்த விழாவிற்கு நண்பர் செல்வலிங்கமும் வந்திருந்தார்.
அவரும் அந்த விழாவில் பாடினார். அன்று எங்கள்
வானொலிக் காலம் எங்களது பொற்காலம்.
——————————————————————————

காலதேவன் போட்டுவிட்ட கோலம்…
கடலினிலே நாங்கள் விடும் ஓடம்..
மேடுபள்ளம் பார்ப்பதென்பதேது-இங்கு
கோடுபோட்டு வாழ்வதென்பதேது…

சோற்றுக்காக தினமும் சாகும் நேரம்
சென்றிடுவோம் நாங்கள் ரொம்ப தூரம்…
காற்றுவந்து திசையை மாற்றும்போது
கரையினிலே கேட்கும்மந்த ஓலம்…

காணிகூட எங்களுக்கு இல்லை .
காடுவெட்டி களனியாக்கிக் கொள்ள
தோணி என்ற ஒன்று இல்லையென்றால்
வீடு சோறு என்ற தொன்று காண்பதேது..

தண்ணீரின் பிள்ளைகளாய் நாங்கள்…
கண்ணீரில் வாழ்ந்துவரும் மனிதர் ..
சொன்னாலும் புரிந்திடுமா போங்கள்..
சொகுசாக வாழ்ந்துவரும் நீங்கள்…

கோவெல்லூர் செல்வாராஜா