சற்று நில்லுங்கள்…கவிதை.ரதிமோகன்

கருப்பழகி பேச்செல்லாம்
கதைக்குள் கவிதைக்குள்
கற்கண்டாய் இனிக்கிறது
நிஜத்திலோ அவள் வேதனை
நீவிர் கண்டீரோ..

மூன்றுமுடிச்சுக்கு மூவாயிரம்
படிகளேறி சாதகம் பார்த்தும்
பத்துப் பொருத்தம் இல்லையென
பெற்றோர் உற்றாரும் புறுபுறுப்பு
தேடிய புறோக்கரின் செருப்பும்
தேய்ந்து போன கதை அறிவீரோ..

பொட்டைப்பிள்ளை கருப்புத்தோலாம்
கத்தை கத்தையாக கரன்சிநோட்டாம்
தட்டத்தில் வைத்தபோதும்
பத்தவில்லையாம்
தொந்திவிழுந்த மாப்பிள்ளைக்கு..

கல்யாண சந்தைக்குள்ளே பேரம்
தடல்புடலாய் நடக்கிறது
கருப்புக்கு இல்லை என்றுமில்லை மவுசு
கனவுகளோடு முப்பதைத்தாண்டியும்
தாலிக்கு ஏங்குகிறது கழுத்து…

நிறம் பார்த்து பணம் பார்த்து
நிலையற்ற இந்த வாழ்க்கைக்காய்
நித்தம் நித்தம் நாம் இறப்பதை
நீவீர் கண்டும் காணாமல் போவீரோ..
இப்படிக்கு
வேதனையோடு
கருப்பழகி

ஆக்கம் ரதிமோகன்