சாந்தன் கோகுலன் பற்றி கலைஞர்தயாநிதி


ஈழக் குயில்
யாழ்ப்பாணம்
தமிழ் ஈழம்..
………………………………..
அறிமுகம் இவனுக்கு அவசியமாகாது.எங்கள் தேசக் குயிலின் புதல்வன்.இந்த மண் எங்களின் சொந்த மண் என ஈழத்தமிழர் மனங்களில் எழுச்சிக்காகக் குரல் கொடுத்த அமரர் சாந்தனில் மகனல்லவா.இன்று உலகப் பரப்பெங்கனும் பறந்து பறந்து கூவும் குயிலிவன்.எங்கள் அடுத்த சந்ததியினருக்கான ஆவணப் பதிவே இப்பதிவின் நோக்கமாகும்.புங்கை நகரின் சொந்தக்காரன்.ஆனாலும் இவன் பிறந்தது கிளிநொச்சியாகும்.இவனது தாத்தா ஆரம்ப காலத்தில் விவசாயம் செய்வதற்காக இங்கு வந்து தங்கியவராவார்.காடுகளை அழித்து விவாசாயம் செய்யத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்.
கோகுலன் தனது ஆரம்ப பாடசாலையை கிளிநொச்சி கனகாம்பிகை தமிழ்க் கலவன்
பாடசாலையில் தெடங்குகின்றான்.அடிக்கடி இடப் பெயர்வினால் ஈழ யுத்தம் இவனுக்கு பல பாடசாலைகளை அறிமுகமாக்கியது.இரண்டாம் தரத்தில் இருந்து ஐந்தாம் தரம் வரை புங்குடு தீவு கணேசா மகாவித்தியாலயத்திலும் பின் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் உயர் தரம் வரை பயில்கின்றான். கூடவே சங்கீத்தையும் பாடசாலை மட்டத்தில் பயின்றுள்ளான்.
இவனது இசைப் பயணமும் கலை வாழ்க்கையும் தனது தந்தையோடே பின்னிப் பிணைந்ததாகப் பகிர்ந்தான்.பாடசாலைக் காலங்களில் பாடல் போட்டிகள்.கலைத் திறன் போட்டிகள்.நாடகம்.விவாத அரங்கப் போட்டிகள் என சிறு வயதிலேயே பங்கு பற்றி முதல் பரிசினையும் பதக்கங்களையும் பெற்றுள்ளான். முதன் முறையாக கடந்த ஆண்டு 2017 யூலை மாதம் கலை நிகழ்வுக்காக கோகுலன் நோர்வே நகரில் தமிழ் சங்கத்தினரின் கலை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சமயத்தில் இவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பாடகர் சாந்தன் அவர்களை எட்ட நின்று பார்த்து பரவசப் பட்ட எனக்கு கோகுலனை தொட்டும் பேசும் அரிய வரம் கிடைத்தது..இரண்டு நாட்கள் ஒத்திகையின் போதும் அரங்காற்றுகையின் போதும் அருகிருந்து பேசும் வாய்ப்பு நிறைவாக இருந்தது. அன்போடு அப்பா என அழைத்து நெருங்கி விட்ட உறவானான்.
இவனது பண்பும் அணுகு முறைகளும் கலைஞர்களுக்கு பெரும் எடுத்துக் காட்டாக அமைவதை உணர்ந்தேன்.பாடும் தருணம் தாண்டி ஓரத்தில் இருந்து அடுத்த பாடலுக்கான பயிற்சியும் தியானமுமாக இருந்தான்.உடலில் மிகவும் கவனம் நிறைந்தவனாக எங்காவது ஜிம் போகலாமா என வினாவிய படி நின்றதை அவதானித்தேன். தனக்கு கிடைத்த ஆசிரியர்களின் அக்கறையும் கண்டிப்பும் அரவணைப்பும் தான் தன்னை செதுக்கியிருப்பதாகத் தன் குருமாரை நன்றியுணர்வுடன் நினைவு கூறினான்.
புகழ் பூத்த பெரும் கலைஞர்களோடும் தனது தந்தையோடும் அரிச்சந்திரமயான காண்டம் நாடகத்தில் லோகதாசனாக நடித்த அனுபவத்தை சுவை படச் சொன்ன விதம் நல்ல நாடகக் கலைஞன் என்பதையும் உணர முடிந்தது. தாயக விடியலுக்காக இரண்டு சகோதரர்கள் சென்றிருந்த போதும் வீட்டுக்கு ஒருவர் வாருங்கள் என்ற அவசர அழைப்பால் தானும் இணைந்து கொண்ட தன் தேசிய உணர்வை பகிர்ந்தான்.அப்பாவும் தானும் தங்கையும் 2009 இல் கைதாகி அனுபவித்த அனைத்துச் சம்பவங்களையும் விளக்கமாச் செப்பியவன் அங்கு தமக்கு புணர்வாழ்வு கிடைத்த போது சில நல்ல விடையங்களையும் சொல்ல வேண்டும் என நியாயம் செய்தான். நன்றி மறவாத பண்பினை அழகாக விளக்கினான். உள்ளே துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப் பட்டதாகவும் தாம் கலைஞர்கள் என அடையாளப் படுத்தியதால் குரல் பயிற்சி நாடகப் பயிற்சி என வழங்குவதற்காக பிரபல சினிமா நடிகை அனோஜா வீரசிங்கா நியமிக்கப்பட்டதாகவும்.அபினா அக்கடமி எனும் கலைத்துறையினை அமைத்து அதனூடாக சில கருணையுள்ளோரால் தாம் பயிற்றுவிக்கப் பட்ட அனுபவங்களை கூறினான்.யாவும் இராணுவ அட்டவணைப் படி அவர்கள் மத்தியிலேயே நடை பெற்றதாகவும். இரண்டு வருடத்தில் விடுதயைான சம்பவம் வரை பேசி முடித்தான்.
ஆனாலும் பயிற்சி முடிவில் கோகுலனை சிங்களப் படமொன்றில் நடிப்பதற்கு தேர்வு செய்து பயிற்சி அளித்து தமது பிரச்சாரத்துக்காக தன்னை ஓர் முன்னாள் போராளியாக தமது எண்ணக்கருவுக்கு சாதகமாக்கி நடிக்க வைத்த பாதகத்தை கூறும் போது கண்கண் கலங்கின. அது தனக்கு படமல்ல இருண்ட படமென உரைத்தான்.இதைத்தான் கையறு நிலையென்பர்.
விடுதலையாகி வெளியே வந்ததும் அப்பா தனது இசைக்குழுவினை மீளக் கட்டி எழுப்பினார்.நானும் இணைந்து பாடத் தொடங்கி முழுநேரப் பாடகனாக மாறி விட்டேன்.இலங்கை நேத்திரா தொலைக் காட்சியில் காவேரி எனும் நாடக் தொடரில் நாயகனாக நடித்துள்ளேன்..காதல் விம்பம் எனும் தொலைக் காட்சி தொடரிலும் இப்போது நேத்திராவில் கௌதமி எனும் தொடரிலும் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றேன்.
பத்து வயதில் இருந்து அப்பாவோடு பாடி வந்துள்ளேன். எத்தனை அரங்குகள் என்பது உண்மையில் நினைவில் இல்லை என்றான்.தாயக இசைஅமைப்பாளர்கள் முரளி.சிறகுகள்.இசைப்பிரியன்.சாய்தர்ஷன்.கந்தப்பு ஜெயந்தன்.துஷி. போன்றவர்களின் இசையில் பாடியுள்ளேன்.ஐம்பதுக்கு மேற்பட்ட பக்தி பாடல்கள்.பத்து காதல் பாடல்கள் மற்றும் திருமணப் பாடல்கள் என இதுவரையில் 100 பாடல்களைப் பாடியுள்ளேன். என் அப்பா தயாரித்த யாழ்ப்பாணத்து காதல் எனும் இறுவட்டில் நான் பாடிய பாடல் காட்சிப் படுத்தலுடன் வெளியாகிய போது பல விருதுகளை தனதாக்கியுள்ளதெனக் கூறி மகிழ்தான்.
இலங்கையில் நடந்த பாடல் போட்டியில் வென்று சிங்கப்பூரில் நடை பெற்றபோட்டியில் கலந்து நான்காவது இடத்தை தக்க வைத்ததாக கூறி மகிழந்தான்.2003 இல் இலங்கை தேசிய இளையோர் விருதையும் இளம் பாடகருக்காக பெற்ற இசைக் கலைஞன். என் அப்பாவின் கனவும் தாகமும் அவர் உருவாக்கிய இசைக் குழு அதனை வளர்த்து பல இளையோருக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களுக்கும் முன்மாதிரியாக நான் இருக்க வேண்டும் என உறுதி படக் கூறியது நம்பிக்கையாக இருந்தது. கலாச்சார சீர்கேட்டில் இருந்து இளையோரைக் காப்பாற்றல் அவசியம் என்பதில் இவனது நேர்த்தி பிடித்துக் கொண்டது. தனது அப்பா நோய்வாய்பட்டு அவதிப் பட்ட போது புலம் பெயர் நாடுகளில் இருந்து உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டவன் என்பதையும் ஆழமாகப் பதிவு செய்தான்.
ஈழத்துப்பாடகன் கோகுலன் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும். உலக அரங்குகளில் இசைப் பயணம் தொடர வேண்டுமென வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே…வாழிய வாழியவே கோகுலன்…
10.02.2018