”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி

1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்.  தொடக்கக்கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் கற்றார். போரின் நடுவே இடம்பெயர்வுகளால் 7 பாடசாலைகளில் படித்து, மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரத்தையும் பின்னர் IHS இல் உதவி மருத்துவர் கற்கையையும் கற்றிருக்கிறார். உயர்தரம் படிக்கும் காலத்திலேயே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதி அறியப்பட்ட இவர் 2009 இன் பின்னர் வலைப்பதிவாளராகவும் அறியப்பட்டிருந்தார். ஆவணப்பட உருவாக்கத்திற்கான உயர் பட்டயக் கற்கையினை முடித்திருககிறார் 12 குறும்படங்கள், 5 ஆவணப்படங்கள், ஒரு பாடல் என்பவற்றை இயக்கியதுடன் 25 குறும்படத்துக்கு மேல் நடித்தும் உள்ளார். உம்மாண்டி என்ற முழு நீளத் திரைப்படத்தையும் இயக்கி நடித்துள்ளார். போருக்குப் பிந்தைய ஈழத் திரைத்துறையில் நம்பிக்கை அளிப்பவராக ஊக்கத்துடன் இயங்கி வருகிறார். ஈழ சினிமாவில் பெரும் தாகத்துடன் பயணித்து வரும் மதிசுதா வணக்கம் லண்டனுக்கு அளித்த பேட்டி. –ஆசிரியர்

மதிசுதா க்கான பட முடிவு

ஏன் திரைத்துறையில் இந்த ஆர்வம்?

எந்த ஒரு மனிதனுக்கும் தான் இறந்த பின்னும் வாழ்வதற்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஒன்று நிச்சயம் இருக்கும் தானே, அப்படி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என வாழ்வதில் நாட்டமில்லாதவன் நான்.

வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட அனைத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை ஏமாற்றாமல் என்னை நேசித்த விடயங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று இந்த சினிமாத்துறை இரண்டாவது எனது கணக்குத்துறைத் தொழில் ஆகும்.

இத்தனை குண்டு மழைக்குள்ளும் நீங்கள் கடவுளால் காப்பற்றப்பட்டிருந்தால் அதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்குமல்லவா ? இத்துறை கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கடமையாகவும் இருக்கலாம் என பல தடவைகள் நினைத்திருக்கிறேன்.

ஏனென்றால் எனக்கு இத்துறையில் இருக்கும் அறிவு அனைத்தும் நானாக தேடித் தேடிக் கற்றுக் கொண்டவை தான். இவை எல்லாம் எனக்கு எப்படிக் கிடைத்தன என்ற கேள்வியையும் எனக்குள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.

இதை ஆர்வம் என்பதை விட ஒரு இலட்சியமாகவே நான் சொல்வேன்.

ஈழத்தில் நடக்கும் திரை முயற்சிகள் பற்றி சொல்லுங்களேன்?

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஈழ சினிமா தனது இலக்குக்குரிய பிரகாசத்தைப் பெற்றிருக்கிறது என்றே கூறுவேன். 2015 , 2016 காலப்பகுதி போல் பொழுது போக்காக படம் செய்யும் யாரும் இப்போது துறையில் அவ்வளவாக இல்லை. இப்போது இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் தேடல் உள்ளவர்கள் என்பதற்கப்பால் தனிப்பட்ட ஒழுக்கத்தில் கவனம் உள்ளவர்கள் என்பதால் ஈழ சினிமா பற்றிய பெரியளவான பேச்சுக்கள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது வரும் படைப்புக்கள் அனைத்தும் தரமாகவே உள்ளன.

ஈழ சினிமாவின் இவ்வளவு தேக்க நிலைக்கு பிரதான காரணமனவர்களில் தனி ஒழுக்கமற்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு துறைக்குள் வந்த சிலரால் உண்மையான உழைப்பாளிகளின் பெயர்களும் கேள்விக்குறிகளாக்கப்பட்டு ஈழ சினிமாக் கனவில் இருந்த பலரை அதை நிராகரிக்கும் அளவுக்கு மாற்றியது.

இப்போது பல படைப்பாளிகள் அணுவணுவாக தமது படைப்பை பொறுமையும் நிதானத்துடனும் செதுக்குகிறார்கள். அவை தொகையில் நிரப்பாவிடினும் என்றென்றும் பேசப்படும் படைப்புகளாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.

மதிசுதா க்கான பட முடிவு

யாழில் இந்திய மற்றும் தெலுங்கு பாணியிலான படங்களிலும் மதிசுதாவும் வருகிறாரே?

(சிரிப்புடன்) ஆமாம் வருகிறேன், ஆனால் பேச்சு மொழி விடயத்தில் நான் என்றும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. நான் எப்போதும் சக படைப்பாளி எவரானாலும் மதிப்பவன் என்பது என்னோடு பழகும் அனைவருக்கும் தெரியும்.

எல்லாவற்றையும் விட எனக்கு நடிப்பது மிக மிகப் பிடித்தமான துறையாகும். அதிலும் யதார்த்தமான பாத்திரம் என்றால் எனக்கு இன்னும் பிடிக்கும். அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் அவ் நட்பு அடிப்படையில் என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததில்லை. நானே தான் விரும்பிச் சம்மதித்திருக்கிறேன்.

மதிசுதா க்கான பட முடிவு

ஆனால் நடிக்கப் போகும் இடங்களில் நான் கதை திரைக்கதை விடயத்தில் தலையிடுவதே இல்லை. ஒரே ஒரு படைப்பில் மட்டும் பொய்யான கதை சொல்லி என்னை ஏமாற்றியதால் முரண்பட்டு விலத்தியிருக்கிறேன்.

ஒரு படைப்பாளிக்குரிய சுதந்திரத்தைப்பற்றி என்னால் கேள்வி கேட்க முடியாதல்லவா ஆனால் நான் இப்படித் தான் செய்வேன் என்பதில் நான் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன்.

இன்னொரு மறை முக விடயமும் இருக்கிறது ஒரு துறை தன்னை நிலை நிறுத்துவதற்கு அத்துறையின் தொழில்நுட்பத்துக்குரிய முதலிட்டவர்களுக்கு சிறிய அளவிலாவது அவ்வப்பொது ஏதாவது வருமானங்கள் வந்து கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் படைப்பாளிகள் இயங்கிக் கொண்டே இருக்கட்டும். இப்போது பார்வையாளர்கள் எல்லோரும் பெரிய புத்திசாலிகள் அவர்களே ஒரு படைப்பாளியை சரியான பாதைக்கு உருவாக்கி விடுவார்கள். அல்லது நிராகரித்து விடுவார்கள்.

தொடர்புடைய படம்

தற்போதைய திரைக்கான உங்கள் நிதி சேகரிப்பு திட்டம் எந்தளவில் உள்ளது?

உண்மையைச் சொன்னால் மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு வருடமும் கடந்த நிலையில் 129 பேரே என்னை நம்பி வந்தார்கள். ஆனால் மீளளிக்கக் கூடிய 1000 ரூபாய் தான் ஒரு பங்குத் தொகை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இப்படைப்பில் இதுவரை 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களை சேர்த்திருக்கிறேன் இப்பெரும் தொகையை சேர்த்ததே பெரிய வெற்றியாகத் தான் கருதுகிறேன். ஆனால் அடுத்த நவம்பர் 16 ம் திகதி ஜனாதிபதி மாறுவதால் அதற்குள் படத்தை முடிக்க வேண்டி கட்டாயத்தில் இருக்கிறேன்.

காரணம் போர்க்களம் சார்ந்த கதை என்பதால் வருபவர் சட்டதிட்டங்களை மாற்றினால் மீளவும் அனுமதிக்காக மாதக்கணக்காக அலைய வேண்டும்.

crowedfunding என்ற இத்திட்டத்தில் நான் வெற்றி பெறுவேனாக இருந்தால் அனைவருக்கும் ஒரு பெரிய கதவை இது திறந்து விடும் என்று நம்புகிறேன். காரணம் நான் இப்போதே எனது நண்பர்களின் படங்களில் production manager ஆக பணியாற்றுகிறேன். இன்னொரு படைப்பாளி தனது சிறு தொகையில் நல்ல ஒரு முன்னோட்டத்தை உருவாக்கினால் கூடப் போதும் அதை வைத்து crowedfunding முறையில் பல படங்கள் உருவாகச் சந்தர்ப்பமாக அமையும். ஒரு பங்கு 1000 ரூபாவாக இருக்கும் போது பண முதலிட்டவரே தனது இரண்டு நண்பருக்கு படத்தை சிபாரிசு செய்து விட்டால் போதும் இலகுவாக படத்துக்குரிய முதலீட்டுத் தொகை மீளப் பெறப்பட்டு விடும்.

அண்மையில் இணைய வந்த இரண்டு தயாரிப்பாளரைக் கூடத் தவிர்த்து விட்டேன் காரணம் இத்தனை மாதங்கள் இதற்காக முயற்சித்து விட்டு படத்துக்கு பணம் வேண்டும் என்ற காரணத்துக்காக crowedfunding என்ற முறமையில் இணைத்தவரை இன்னொரு தயாரிப்பாளரின் பெயரின் கீழ் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. இச்சந்தர்ப்பத்தைத் தந்த வணக்கம் லண்டன் தளத்துக்கு மிக்க நன்றிகள்.

நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்.