***சொந்தங்கள் ***கவிதை கவிஞர் நொந்த நேசன்

சொந்த பந்தங்கள்
சேர்ந்த வாழ்வுதான்
சொர்க்கமாகுமென்று
சொன்னார்கள் பலரும் அன்று,
சேர்த்துக் கொண்ட
சொந்தங்களின்
சொல்லொணா
சோதனைகளால் நானும்
சோர்ந்து போகிறேன் இன்று.
சோறு கண்ட இடத்தை
சொற்கமாக்கி
சொகுசாய் வாழத் துடிக்கும்
சோம்பேறி உறவுகளாலும்,
சொத்துக்காக
சொந்தமானத்தை இழந்து
சோரம் போகும்
சொப்பன சுகவாசிகளாலும் ,
சொக்கத்தங்கமென தங்களைச்
சொல்லிக் கொண்டு
சோடினை வாழ்க்கை வாழும்
சோக்காளிகளாலும்,
சொந்தக் காலில் நிற்காது
சோகராகம் பாடி
சோற்றுக்கு வழி கோரும்
சோத்து மாடுகளாலும் ,
சோதனை வேதனையில்
சொல்லிக்கொள்ளாமல்
சொந்தம் மறக்கும்
சொக்கட்டான்ளாலும் ,
சொட்டுச்சொட்டாக என்
சொந்த பந்தங்களின்
சொந்த முகம் கண்டு
சேற்றைப் பூசிக் கொண்டேன்
சோதித்தது போதும் இறைவா
சொந்த வாழ்வை வாழவிடு .
(நொந்த நேசன் )