தமிழுலகிற்கான பொக்கிசமாக, கிளிநொச்சியில் நடந்தேறிய ‚கிளிநொச்சி அரங்க மரபு‘ நூல் வெளியீடு.

போருக்குப் பின்னர் அநேகமான கலைசார் அடையாளங்கள் அழிந்தன அல்லது தக்கவைக்கப்படாமலிருக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலை வடிவங்கள் நவீன யுகத்திலே மறைந்துபோயிருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் அரங்க மரபு பற்றிய தேடலுடன் கூடிய ஆய்வுத்தரவுகளுடனான நூலே ச.யேசுதாசன் எழுதிய ‚கிளிநொச்சி மாவட்ட அரங்க மரபு‘ எனும் நூலாகும்.

இந்நூலின் வெளியீட்டு விழாவானது 11.04.2019 வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். கிளிநொச்சி காவேரிக் கலாமன்றம் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தது.

மங்கல விளக்கேற்றல், அகவணக்கம் எனபன முறையே இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தினை கட்டைக்காடு கலைஒளி கலாமன்ற மாணவிகள் நிகழ்த்தினர். ஆசியுரையினை கிளிநொச்சி அன்னை இயக்குநர் அருட்பணி அந்தோனிப்பிள்ளை குரூஸ் வழங்கினார். வரவேற்புரையினை புளியம்பொக்கணையைச் சேர்ந்த ‚நினைவுகளின் நினைவோடு‘ நூலாசிரியர் வேல்மகள் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து, வாழ்த்துரையினை கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரி அதிபர் மரியாம்பிள்ளை அன்ரனிசாந்தா வழங்கினார். நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.

தொடர்ந்து காவேரி கலாமன்ற நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லெபோறா ஜீவமலர் வெளியீட்டுரை ஆற்றினார். நூலினை அரங்கச் செயற்பாட்டாளரும், கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளருமாகிய செ.விந்தன் வெளியிட்டு வைக்க, சிவனருட்செல்வன் அரிசி ஆலை உரிமையாளர் பி.ஞானசம்மந்தன் முதற்பிரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூற்பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ‚நாடகமும் அரங்கியலும்‘ ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தம் நிகழ்த்தினார். இத்தாலியிலிருந்து வருகை தந்த அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் தனது அரங்கவியல் அனுபவப் பகிர்வினை பாடலுடன் இணைந்த உரைமாக வழங்கினார். அரங்கச் செயற்பாட்டாளரும், கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய செ.விந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஏற்புரையினை நூலாசிரியர் ச.யேசுதாசன் வழங்கினார். கிளிநொச்சி விவசாயக் கல்லூரி விரிவுரையாளர் துஸ்யந்தினி நன்றியுரை வழங்கினார்.

தமிழர் பண்பாட்டின் கூத்து வடிவங்களை சுவடி வழியாக தொடர்ந்து பின்பற்றி வரும் கலைக்குடும்பத்தினைச் சேர்ந்த ச.யேசுதாசன் அவர்கள் கிளிநொச்சியின் தொல்லியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சில வருடங்களான தேடலிலும், தகவற்திரட்டிலும் உருவான ‚கிளிநொச்சி அரங்க மரபு‘ நூலானது போருக்குப் பிந்திய ஈழத்து இலக்கிய வருகையில் குறிப்பிடத்தக்க ஒன்றெனலாம்.