தர்மா தர்மகுலசிங்கத்தின் நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது..

ஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டி திரு இருதய கல்லூரியில் இடம்பெற்ற டென்மார்க் தருமன் தருமகுலசிங்கம் அவர்களின் டெனிஷ் எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா.

டென்மார்க் தேசத்து பிரபல எழுத்தாளரும், ‘தேவதைகளின் கதைகள்’ என அறியப்படும் கதைகளின் முக்கிய நாயகனுமாக அறியப்படும் மறைந்த டெனிஷ் எழுத்தாளர் அனசனின் சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான ‘என் வாழ்க்கை ஓர் அழகிய கதை’ நூலின் வெளியீட்டு விழாவானது 28.08.2017 திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு யாழ்ப்பாணம் நெல்லியடியில் கரவெட்டி திரு இருதயக் கல்லூரியில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் முனைவர் சி.சதீஸ்குமார் நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்பு இடம்பெற்றது. தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது. வரவேற்பு நடனத்தினை கரவெட்டி திரு இருதய கல்லூரி மாணவிகள் அளித்தனர்.

வரவேற்புரையினை கரவெட்டி திரு இருதய கல்லூரி அதிபர் இராகவன் வழங்கினார். தலைமையுரையினை நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் சி.சதீஷ்குமார் நிகழ்த்தினார்.

நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.

தொடர்ந்து நூலினை பிரதம விருந்தினர் ஆ.நடராஜன் அவர்களிடம் எழுத்தாளர்/நூலாசிரியர் தருமன் தருமகுலசிங்கம் அளித்து வெளியிட்டார்.

நூலின் நயப்புரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கே.அருந்தாகரன், எழுத்தாளர் மாத்தளை வடிவேலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் த.கலாமணி ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து குழு நடனத்தினை கரவெட்டி திரு இருதயகல்லூரி மாணவிகள் நிகழ்த்தினர். சிறபுரையினை வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் நந்தகுமார் நிகழ்த்தினார்.

விருந்தினர்கள் பிரதம விருந்தினர் இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் ஆகியோர் நிகழ்த்தினார்.

தொடர்ந்து சான்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர். மூத்த எழுத்தாளர் தெனியான் உள்ளிட்ட சான்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்வில் மணிவிழா நாயகனும் அனசனின் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியருமான டென்மார்க் தருமன் தருமகுலசிங்கம் கெளரவிக்கப்பட்டார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை தருமன் தருமகுலசிங்கம் நிகழ்த்தினார்.

தருமன் தருமகுலசிங்கம் அவர்கள் தமிழ் நூல்களை டெனிஷ் மொழிக்கு மாற்றம் செய்வதிலும் ஈடுபட்டுள்ளவர் என்பதுடன் ‘டெனிஷ் தமிழ் பப்ளிகேசன்’ எனும் நூலாக்க அமைப்பின் மூலம் தொடர் இலக்கியப் பணிகளையும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்ச்சிகள் யாவையும் ஆங்கில ஆசிரியரும், மிமிக்ரி கலைஞருமான சன் அவர்கள் நேர்த்தியாக தொகுத்தளித்தார்.
நிறைந்த தமிழுறவுகளின் பங்கேற்புடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

Merken