தாசீசியஸ் பவள விழா – ஒரு ஊடகனின் பார்வை

நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா அண்மையில் சுவிஸ் நாட்டின் லுற்சர்ன் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மங்கை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக முன்னைநாள் கலைப் பீடாதிபதி கலாநிதி பால சுகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஈழத்து நவீன நாடக முன்னோடி என அறியப்பட்ட தாசீசியஸ் அவர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெறக் காரணம் ஐ.பீ.சி. வானொலியே. பீ.பீ.சி. வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஐ.பீ.சி. வானொலியை ஆரம்பித்த பொழுதில், அந்த வானொலியானது பின்னாளில் தமிழீழப் போராட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

வானொலியின் பின்னர் அவர் கால் பதித்த துறை கல்வி. புலம்பெயர் தமிழ்ச் சிறார்களுக்கான தமிழ் வழி  எனும் பெயரிலான தமிழ் மொழி மூலப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட போது அதற்கான வளவாளர் குழுவில் போராசிரியர் க. சிவத்தம்பி உள்ளிட்டோருடன் அவரும் இடம் பெற்றிருந்தார்.

தொடர்ந்து அவர் ரீ.ரீ.என். தொலைக்காட்சியில் பணி புரிந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தேவைப்பட்ட வேளையில் அவரின் பணி நீதிக்கும் சமாதான அபிவிருத்திக்குமான அமைப்பின் ஊடாகத் தொடர்ந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையையும், ஈழ மண்ணில் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும் இராஜதந்திர வழியில் புரிய வைக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதேவேளை, தனது ஊடக அனுபவத்தை தாயகத்தில் இருந்த போராளிகளிடம் பகிர்ந்து கொண்டு அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவும் அவர் தவறவில்லை.

tharseesius-swiss (1)

மறுபுறம், தனது நாடக முயற்சிகளையும் அவர் கைவிடவில்லை. அவர் வசிக்கும் லண்டனிலும், சுவிற்சர்லாந்து நாட்டிலும் அவரின் நாடக முயற்சிகள் தொடர்ந்தன. சுவிஸ் நாட்டில், தொழில்முறை நாடகக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.

பல்துறை வித்தகரான தாசீசியஸ் அவர்களின் பவளவிழா கடந்த வருடத்தில் லண்டன் மாநகரில் நடந்தேறி விட்டது. எனினும், அவரிடம் பயின்ற நாடகத்துறை மாணவர்களின் அவா காரணமாக மீண்டும் ஒரு தடவை சுவிஸ் மண்ணிலும் அந்த நிகழ்ச்சி நடந்தேறி இருக்கிறது.

2009 ஆம் ஆண்டின் பின்னான காலச் சூழல், நண்பர்களை எதிரிகளாகவும் எதிரிகளை நண்பர்களாகவும் ஆக்கி விசித்திரம் புரிந்துள்ளது. காலத்தின் தேவையாக உள்ள அரசியல் மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ‘துரோகி”ப் பட்டம் வழங்குவதையோ முழு நேரப் பணியாகக் கொண்டு ஒரு சாரார் களமிறங்கி உள்ளதைக் காண முடிகின்றது. இப் பணியில் ஒருசில ஊடகங்களும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன.

‘சோலி வேண்டாம்” என ஒதுங்கிச் செல்பவர்கள் ஒருபுறம். துரோகிப் பட்டங்களைத் தாங்கியவாறு ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என  மனம் வெதும்பிச் செல்பவர்கள் மறுபுறம் என விலகி இருப்போரின் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்லும் நிலையில் தாசீசியஸ் அவர்களின் பவள விழா பல்வேறு தரப்பினரையும் ஒன்று கூடச் செய்வதில் வெற்றி கண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

கடந்த 8 வருடங்களில் பொது இடங்களில் ஒருசேரக் காணக் கிடைக்காத முகங்களை ஓரிடத்தில் காணக் கூடியதாக இந் நிகழ்வு அமைந்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அன்ரன் பொன்ராஜா அவர்களின் ‘செல்வாக்கை” இதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

tharseesius-swiss (5)

சர்ச்சைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளமையை இந்த நிகழ்வும் வெளிப்படுத்தத் தவறவில்லை. நடன ஆசிரியை ஒருவர் ‘ஏறுது பார், கொடி ஏறுது பார்” என்ற பாடலுக்கு ஆடிய நடனம் கலைக் கண்ணோடு பார்க்கப் படாமல் ‘தமிழ்த் தேசியத்தின் காவலர்களின்(?)” கண்ணால் பார்க்கப்பட்டமை நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும், தனது ஏற்புரையில் தாசீசியஸ் அவர்கள், அந்த நடனத்தைக் கலைக் கண்ணால் மாத்திரம் அவதானித்துப் பhராட்டுதல் தெரிவித்தமை சபையோரின் பலத்த கரவொலிக்குக் காரணமாய் அமைந்திருந்தது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையி னானே என்ற கூற்று பல நூற்றாண்டு கடந்தும் காலப் பொருத்தமாக இருப்பதை முன்னோர்களின் அறிவு எனக் கொள்வதா அல்லது தற்காலத்தவரின் அறியாமை எனக் கொள்வதா?