தாயும் நீ! சேயும் நீ! – இந்துமகேஷ்

தான் வணங்கும் தெய்வத்துக்கு விதவிதமான உருவங்களை வடிவமைத்த மனிதன்
அந்தத் தெய்வங்களுக்கெல்லாம் ஒவ்வொரு விலங்கினை வாகனமாக்கி அவற்றையும்
வணக்கத்துக்குரியனவாக்கினான்.

தன்னுயிர்போல் பிற உயிர்களையும் நேசிக்கவேண்டும் என்ற தத்துவமே அதற்கு அடிப்படையாக இருந்திருக்கும்.
இந்த உலகம் தன் ஆளுகைக்குள்மட்டுமே இருந்தாகவேண்டும் என்கிற வல்லாதிக்க மனப்பான்மை
மனிதனிடம் இருந்தாலும் உலகிலுள்ள அத்தனை உயிரினங்களையும் இவன் தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருப்பதென்பது இயலுமான காரியமா?

எல்லா விலங்குகளுக்கும் மேலாய் ஆறாவது அறிவு என்று ஒன்று இருந்ததால் தான்தான் உயர்ந்தவன்
என்று மனிதன் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் பெரும்பாலான சமயங்களில் விலங்கினும் கீழாய் இவன்
தன்னை மாற்றிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

தற்காத்துக்கொள்ள விலங்கினங்களை வேட்டையாடி அதையே வீரம் என்று பறைசாற்றிக்கொண்டவன்
காலப்போக்கில் தன்னலம் மிகுந்து சகமனிதனையே வேட்டையாடும் நிலைக்கு கீழிறங்கிப் போனான்.

ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனியானதோர் குணாதிசயம் உண்டு. ஆனால் அத்தனை குணாதிசயங்களும் ஒட்டுமொத்தமாகக் கொண்ட ஒரு விலங்குதான் மனிதன். அவ்வப்போது ஒவ்வொருவரும் தனக்குத்தானே ஒப்புக்கொள்ளும் உண்மை இது.

எல்லா உயிரினங்களுக்கும் -மனிதன் உட்பட- அடிப்படையான உணர்வுகள் இரண்டு. ஒன்று பசி.
மற்றது காமம்.
பசியோடு தொடங்குகிற வாழ்க்கைபசிக்கான உணவுத் தேடுதலோடு தொடர்கிறது. உடல் வளர வளர
கூடவே காமமும் வளர்கிறது. காமத்தின் பயனாய் சந்ததிகள் பெருகுகின்றன. சந்ததிகளோடும் பசியும்
காமமும் தொடர்கின்றன.

பத்துத் திங்கள் தன் கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னைஇ தன் மழலையின் பசியறிந்து பாலூட்டுகிறாள்.
பாலூட்டும்போது கூடவே பாசத்தையும் கலந்து ஊட்டுகிறாள்.

பிறக்கும்போது கூடவே பிறக்கும் பசியைப்போக்கும் அன்னையின் முலைப்பால் வெறும் உணவு மட்டுமல்ல
அது உயிர்வளர்க்கும் அமுதம். பாசமெனும் உணர்வின் பரிமாற்றம்.

அன்னையின் முலைப்பால் அருந்தி ஆரம்பிக்கும் வாழ்வு, முதுமைபெற்று முடிவுக்கு வரும் இறுதிப் பொழுதுகளிலும் பால்புகட்டி பரலோகம் அனுப்பிவைப்பதை பெரும்பான்மையான மனிதர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிருககிறார்கள்.
மழலையாய் இருக்கும்வரை அன்னையின் முலைப்பால் கிடைக்கும்.
ஒரு குறிப்பிட்ட வயதுவரை தொடர்ச்சியாய் அன்னையிடமிருந்து பால்பெறும் வாய்ப்பு எல்லா மழலைகளுக்கும் கிட்டுவதில்லை. அன்னை தரும் அமுதத்துக்கு ஒப்பான வேறொரு பால் கிட்டாதபோதிலும்
அதற்கு ஈடாக பால்தரும் பொறுப்பை விலங்கு வடிவத்திலிருக்கும் ஒரு தாய் ஏற்றுக்கொள்கிறாள்.
அந்தத் தாயை பெரும்பாலான மனிதர்கள் தம் வீடுகளில் வளர்த்துப் பராமரிக்கிறார்கள்.
தன்னை வளர்க்காதவர்களுக்கும் எங்கோ கண்காணாத இடத்திலிருந்துகொண்டும் பால்தந்து காக்கிறாள்
பசுவெனும் அந்தத் தாய்.
தன்னைப் பெற்றவளைக் காக்கின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் பற்றுதலோடும் பாசத்தோடும் பசுவை ஆதரித்து வளர்க்க மனிதன் பயின்றிருக்கிறான்.
எத்தனைவிதமான விலங்குகளை மனிதன் பிரியத்தோடு வளர்த்தாலும் அவற்றையெல்லாம்விட பசுமீது அதிகபாசம் காட்டுவது அது தாயின் மறுவடிவமாக இருப்பதனால் இருக்கலாம்.

என் சின்ன வயதில் நான் அதிகமாக அருந்தியது ஆட்டுப்பால்.
என் அன்னையின் வளர்ப்புப் பிராணியாக ஆடு இருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏனோ மாடு வளர்ப்பதில் என் அன்னை அதிகமாக அக்கறை காட்டியதில்லை.
ஆனால் என் பெரியம்மா வீட்டில் மாடுகள் வளர்ந்தன.
பெரியம்மா இளம் வயதிலேயே விதவையானவர். குழந்தைகள் இல்லை. தனது சகோதரிகளின் பிள்ளைகளையே தன்பிள்ளைகளாக பாசம்காட்டி வாழ்ந்தவர்.
சாமியம்மா என்று ஊரவர்கள் அழைக்கின்ற அளவுக்கு தெய்வபக்தியில் ஊறிப்போனவர். பெரும்பாலான அவரது
பொழுதுகள் அவர் வளர்த்த பசுக்களுடனேயே கழிந்துபோய்விடும்.
அறிவு தெரிந்தபின் நான் குடித்த பசும்பால் பெரியம்மாவின் பசு தந்ததுதான்.
அதை ஒரு விலங்காகக் கருதாமல் தன் சொந்தப் பிள்ளையைப் போல் பெரியம்மா பராமரித்ததும் அவற்றோடு கதைத்துக் கொண்டிருந்ததும் என் சின்ன வயதில் எனக்குச் சிரிப்பூட்டினாலும் இப்போது நினைத்துப் பார்க்கையில் பெரியம்மாவின் பிற உயிர்களின் மீதான பாசம் விழிகளில் நீரை வரவழைக்கிறது.
(அவர் வளர்த்த பசுக்களின் பாலருந்தியதின் விளைவோ?!)

ஒரு மாலைப்பொழுது.
பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன்.
என் வீட்டிலிருந்து இரண்டு காணிகள் தள்ளி பெரியம்மாவின் வீடு. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு
வருவதானால் பெரியம்மாவின் வீட்டைத் தாண்டித்தான் வரவேண்டும்.
பெரியம்மாவின் வீட்டை நான் அண்மித்தபோது பெரியம்மா யாருடனோ சற்று உரத்த குரலில் சத்தமிட்டுக்
கொண்டிருந்தார்.
“இப்ப நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லையா? வரவர உனக்குக் கொழுப்புக் கூடிப்போச்சுது.
ஏன்ரி என்னை இப்பிடிப் பாடாய்ப் படுத்திறை. வயித்துப் பிள்ளைக்காரி இப்பிடி உண்ணாமத் தின்னாமக்
கிடந்து பெலன் கெட்டுப் போகப் போறை!”
பெரியம்மா யாருடன் இப்படிக் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்?
நெருங்கிப் போனபின் தெரிந்தது-
அவர் தன் வளர்ப்புப் பசுவைத்தான் ஏசிக் கொண்டிருந்தார் என்பது.
“என்ன பெரியம்மா?”
“பாரடா இதை. ஒரு சொல்வழி கேட்குதில்லை.!”
“அதுக்கு அதின்ரை பாசையிலை சொன்னாத்தானை விளங்கும் பெரியம்மா! மனிசப் பாசை அதுக்கு விளங்காதோ
என்னவோ?”
“இதுக்கு விளங்காதா…? எவ்வளவு காலமாய் என்னோடையே இருக்குது? இதுக்கு எல்லாம் விளங்கும்! அங்கை பார்!”
திரும்பிப் பார்த்தேன்.
பெரியம்மாவின் கட்டளைக்குப் பணிந்தாற்போல் அந்தப் பசு இலைஇ குழைகளை மென்றுகொண்டிருந்தது.

ஒவ்வொரு விலங்குக்கும் மற்ற இனத்தின் மொழி புரிகிறதோ இல்லையோ அவை ஏனையவற்றின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன. அவற்றுக்கேற்ப தமது உணர்வுகளையும் மாற்றிக் கொள்கின்றன.
மனிதனோ தன் மொழியையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சகமனிதனின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாமல் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.
பசுவின் பாலை உண்டு உடல் வளர்க்கும் ஒரு மனிதனை சும்மா ஒரு வார்த்தைக்கு மாடு என்று சொல்லிப் பாருங்கள். பாய்ந்து வந்து உங்களை முட்டித் தள்ளிவிட்டுத்தான் அடுத்த வேலை. பசுவின் பாலை உண்டுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோம் என்ற நன்றியெல்லாம் அவனுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வராது.
“முந்தின சந்ததியெல்லாம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தார்கள் அதனால் மனிதர்களாக வாழ்ந்தார்கள் இந்தத் தலைமுறையில் புட்டிப்பால் குடித்து வளர்கிறார்கள் அதனால் மாட்டுப்புத்திதான்!” என்று கிண்டல் வேறு.
ஆனாலும் அவர்களது உள்மனதுக்கு உண்மை தெரியும். ஒருநாள் இல்லாவிட்டாலும் பிறிதொருநாள் இயற்கையில்
நம்மோடு இணைந்து வாழும் பிற உயிர்கள்மீது பரிவும் பாசமும் பிறக்கும்.

“தோட்டத்தில்மேயுது வெள்ளைப்பசு- அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – அதன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி

-கவிமணியின் இந்தப் பாடல் சொல்லும் காட்சியைக் கற்பனைசெய்து பார்த்தால் மனக்கண்ணில் தோன்றுவது வெறும் விலங்குகளா?

(2010இல் வெற்றிமணியில் வெளியான எனது எழுதுவதற்கு எதுவுமில்லை கட்டுரைத் தொடரிலிருந்து)