திரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்

வணக்கம் உறவுகளே.
கடந்த ஆண்டு (2017) லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் (மதிசுதா) மற்றும் நடிகை (ஜெஸ்மின்) க்கும் பரிந்துரைக்கப்பட்ட ”பாதுகை” குறும்படத்தைஇணையத்தில் வெளியிடுகிறேன்.
பட முயற்சியின் தடங்கல்.
2015 ம் ஆண்டு இப்படத்தை எடுப்பதற்கான முன்னயாயத்தத்திற்கு 2 தரம் முல்லைத் தீவு போய் வந்ததுமல்லாமல் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் படம்பிடிக்க போகிறோம். இப்படத்தின் ஆரம்பக் காட்சியானது அத்தனை உடல்களும் தெப்பமாய் மிதந்த வட்டுவாகல் பாலத்தில் அமைய வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்நேரம் படப்பிடிப்புக்கு அங்கு அனுமதியில்லை இருகரையிலும் இரணுவ முகாமே. போதாத குறைக்கு அடுத்த முக்கிய காட்சி அமைய வேண்டிய வற்றாப்பளையிலும் படம் பிடிக்க இராணுவக் கெடுபிடி. சரி என எடுத்த ஒரே ஒரு காட்சியோடு யாழ் திரும்பிக் கொண்டோம்.

ஆனால் அந்த வெறி விடவில்லை மீண்டும் 2016 கிளம்பிப் போனோம் ஆனால் வற்றாப்பளை ஆலயம் மீள் கட்டுமானத்துக்காக தரைமட்டமாகிவிட்டது. வட்டுவாகலிலும் அதே கதை தான். அதற்காக ஒரு திட்டம் இட்டோம். சன்சிகனும் தர்சனும் அந்த தொடுவாயில் மீன் பிடிப்பவரை போட்டோ எடுப்பதற்கென்று அனுமதி எடுக்கா நான் தனியே சைக்கிளில் இவர்களுக்கு சம்மந்தமில்லாதது போல மறு கரைக்கு சென்று அங்கிருந்து அவர்களது ரகசிய அழைப்புக்கமைய பாலத்தில் வர வேண்டும். அவர்கள் மீன் பிடிப்பவரை எடுப்பது போல என்னை எடுப்பார்கள்.
திட்டமிட்டபடியே காட்சி அமைந்ததுமல்லாமல் நான் ஆசைப்பட்ட ஒரு விடயத்தை முடித்த திருப்தியோடு வீடு ஏகினோம்.
இக்குறும்படத்துக்காக என்னோடு உழைத்த மதுரன், சன்சிகன், தர்சன், பவுண் அக்கா, சமீல் போன்றோருடன் குந்தவை அவர்களின் சிறுகதையை எனக்கு அனுமதி வாங்கித் தந்த குணேஸ்வரன் அண்ணா, தங்குமிட ஒழுங்கு செய்து தந்த ஜெரா, நியாகரன் போன்றோருடன்
முதற்கட்ட படப்பிடிப்புக்கு பணம் தந்த தமிழ் பொடியன் ரமணனுக்கும் மீள எடுப்பதற்கு பண உதவி செய்த செவ்வேள் அத்துடன் கமரா பக்கத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட செல்லா அண்ணா அனைவருக்கும் நன்றிகள்.
பிற்குறிப்பு – 2 வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததற்கு பொருத்தருளவும்.