தி.வினோதினியின் ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிதை நூல்

கவிபாடிகளாய் இசைக்கும் தி.வினோதினியின் ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிதை நூல்

மாறாத காயமான‌
ஆறாத வடுக்களவை
மன்னித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடிந்தால்
மறக்கச் சொல்லித்தாருங்கள்

‚மறக்கச் சொல்லித் தாருங்கள்‘ எனும் 32ஆம் பக்கத்தில் அமைந்த கவிதையில் தன் வேண்டுகையை விடுக்கிறார் கவிதாயினி தி.வினோதினி. காலம் கொடுத்த கொடூரங்கள் பலவற்றை மறக்கவே முடியாத‌ மனமொன்றின் மன்றாட்டு அது.

ஈழப்பரப்பில் நூல்களின் வருகைகள் தாராளமயமாகி விட்டன. முன்பெல்லாம் மழைக்காலத்தில் அரிதாக காணக்கிடைக்கும் நடசத்திரங்களைப் போல இருந்த நூல் வெளியீடுகள் எல்லாம், இப்போது வெயிற்கால விண்மீன்கள் போல விரிந்துலவுகின்றன. இம்முயற்சி மொழியின் மலர்ச்சி.

அண்மையில் தி.வினோதினி என அறியப்பட்ட சர்மிலா திருநாவுக்கரசு அவர்கள், ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ எனும் கவிநூலை தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். 105 பக்கங்கள். 45 கவிதைகள். பொதுவாக கவிதையின் தலைப்பொன்றை நூற்தலைப்பாய் பலரிடுவர். இங்கே நூற்தலைப்பில் கவித்தலைப்பு ஏதுமில்லை.

புதிய சந்ததிகள்
நாளை
புகலிடம் தந்த நாடுகளே
தாய் நாடென்று
தலை நிமிர்த்திக் கூறுகையில்
கண் கலங்கி என்ன பயன்?

பயனின்றிப் பறி போகும்
பல்வேறு பக்கங்களை
பாதுகாக்க முன்விளைவோம்
வழியறிந்து வகை செய்வோம்.

‚கோடியில் தேடி என்ன பலன்?‘ கவிதையின் சில வரிகள் அவை. இப்படி யதார்த்த சிந்தனைகளை, சொல்லவேண்டிய பக்கங்களை தனக்குரிய மொழியில் தவழ விடுகின்றார் வினோதினி.

‚வினோதினியின் கவிதைகள் போரில் அழிந்த ஈழம் பற்றியும், போரைக் கடந்த பெண் பற்றியதுமாகவே பிரதானமாக காணப்படுகின்றன‌‘ என்கிறார் நூல் பற்றி வரைந்திருக்கும் கவிஞர் தீபச்செல்வன்.

வினோதினியின் கவிதைகளில் காதல் இல்லாமல் இல்லை. ஆனால் காதல் அதிகமாக இல்லை. இஞ்சித் தேநீரில் இடையிடையே தெரியும் இஞ்சித் துண்டுகலாக காதல் கவிதைகள் சில. மிகுதி எல்லாமே காதலுக்கு அப்பாலான சமூகப் பொறுப்புடைமைக் கவிதைகள்.

‚இலக்கியங்களையும் நூல்களையும் பற்றி அறிந்திராத சிறு வயதில் எனது வீட்டின் நடு அறையில் எப்பொழுதும் பாதுகாப்பாகப் பூட்டப்ப்ட்டிருக்கும் ஒரு அலுமாரியின் மேற்தட்டில் எனது பாட்டனாரின் பழமை நிறைந்த ஓலைச்சுவடிகளும் எழுத்தாணியும் கனமான ஒரு இருப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும்‘ எனும் விடயத்தினை பதிவு செய்திருக்கும் வினோதினி, தனது மூதாதையர்கள் நூல்கள்மீது கொண்ட பற்றினை வெளிப்படுத்துகின்றார். அப்படியான நூலார்வம் கொண்டோர் வழிவந்த‌ வினோதினியும் பல்பக்க வாசிப்பனுபவம் உள்ளவர் என்பது அவரது பல்பக்க கருப்பொருளில் அமைந்த கவிதைகளினால் புலனாகிறது.

பருந்துகள் ஒருபோதும்
பிரசங்கம் செய்வதில்லை
பாவச் செயல்களைப் பற்றி

இப்படி முடிகிறது 77ஆம் பக்கத்திலமைந்த ‚பருந்துகள் பிரசங்கம் செய்வதில்லை‘ கவிதை. நீதி வழங்கா நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடான இது உள்ளார்ந்தமாக ஈழத்தவர் நிலையினை காட்டியிருக்கிறது.

இந்த நூலின் பின் அட்டைக்குறிப்பினை மன்னார் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் கவிஞர் மன்னார் அமுதன் வரந்துள்ளார். இக்குறிப்பு நூலாசிரியர் பற்றி அறிந்திட போதுமாக உள்ளது. வெளியீட்டுரையினை மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் சிவசிறீ மஹாதர்மகுமாரக் குருக்கள் வரைந்துள்ளார்.

காதல் பற்றி இரண்டு கவிதைகள் கண்சிமிட்டுகின்றன. 46ஆம் பக்கத்திலமைந்த ‚கடைசிக் காதலும் கரையும் நேரம்‘ கவிதையில் இப்படி அமைகின்றன இவ்வரிகள்.

அங்கங்கள் அத்தனையும்
அடங்கிப்போய் உறங்கிப்போய்
காலாவதியாகிப்போன காயத்தில்
காய்ந்துபோன கண்ணீரோடு
கரைந்து போயிருக்கும்
உன் மீதான என்
கடைசிக்காதலும்

இது வெறுமனே ஒரு காதற்கவி என்பதற்கு அப்பால் இன்னுமொரு பார்வையை விதைக்கும் விதையாகவே இருக்கின்றது. முற்றுமாய் படிக்கையில் ஒரு அவலமொன்றின் அத்தாட்சியாக அகமிறங்குகின்றது இந்த ஆணிகள்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட வினோதினி, கிளிநொச்சி மாவட்டம், பூநகரி, வேரவில் பகுதியை பிறப்பிடமாகவும், மன்னார் மாவட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவர். கவிதை தவிரவும் கட்டுரையாக்கம், அறிவிப்பு, மேடைப்பேச்சு, சிறுகதை எழுதுதல் போன்ற துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர். மன்னார் பிரதேச செயலகத்தில் தனது பணியினை புரிந்து வருமிவர், கிளி.வேரவில் இந்து மகா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மன்.சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றவர்.

‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிநூலில் மொழிசார் விழிப்பு, தத்துவார்த்த சிந்தனைகள், போர் அவலங்கள், இயற்கை, சமூக‌
பொறுப்புடைமை, காதல் என பல்வேறு கருப்பொருட்களில் அமைந்த கவிதைகள் தவழ்கின்றன. ‚மன்னார் தமிழ்ச் சங்கம்‘ இந்நூலினை வெளியீடு செய்துள்ளது.

பக்கம் 59இல் ‚உங்கள் வசைகள் அவள் காதுகளை எட்டப் போவதில்லை‘ கவிதை இக்காலப் பெண்கள் அநேகர் படிக்க வேண்டியது. வசை மொழிகளால் வாடிப்போகும் பெண்மலர்கள் எத்தனை? இப்படி முடிக்கிறார் வினோதினி.

இப்போது விட்டுவிடுங்கள்
இருள் வண்டுகளின் ரீங்காரத்தை மீறி
உங்கள் வசைகள் அவள் காதுகளை
எட்டப் போவதில்லை

தரமான தாள்களில் அச்சேறியுள்ள இந்நூலின் அட்டைப்படம் இலையற்ற மரத்தினை குறியீடாக்கி செய்தி உரைக்கின்றது. சின்னதான எழுத்துப் பிழைகள் இருப்பினும் பொருட்சிதைவை அவை பெரிதாக‌ காட்டவில்லை. புரிதலுக்குரியதானதாக தென்படுகின்றன. கவித்தலைப்பும், கவிதையும் ஆகிய இரண்டுமே செறிவான எழுத்துருவினால் ஆக்கப்பட்டிருக்கின்றது.

ஈழத்துப் பெண் படைப்பாளர்கள் பட்டியலில் பெயரிடத்தக்கதான தகுதி தி.வினோதினி அவர்களுக்கு உண்டென்பதற்கு ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ சாட்சியல்லாமல் வேறேது? இந்த வரிகள் வினோதினியின் ‚புதைந்த கவிதை மடிவதில்லை‘ கவிதையில் இருந்து…

காற்று மூங்கிலிடம்
புரிவதில்லை
இசைக்கான எந்த‌
ஒப்பந்தத்தையும்

தறிக்கப்படும் மூங்கில்கள்
அழுவதில்லை
தண்டுகள் பிரிந்த‌
சோகத்தில்..