தொட்டதும் பட்டதும் சுட்டதும்.!


பாசத்துக்கு
பருவம் இல்லை.
வாழ்வுக்கு
வரம்பு இல்லை.

அன்புக்கு
எல்லை இல்லை.
உண்மைக்கு
அழிவு இல்லை.

பிறப்பு
ஒருமுறை.
இறப்பும்
ஒருமுறை.

இருப்புக்களோடு
போவதில்லை
விருப்போடும்
போவதில்லை.

பிடிப்பின்றி
வாழ்ந்தாலும்
நடிப்போடு
வாழ்கின்றோம்.

அடுத்தவருக்காய்
வாழ்கின்றோம்.
எமக்காக வாழ
மறுக்கின்றோம்

காத்திருப்பில்
காலங்கள்…
கோலங்கள் மாறுவதை
புரிய மறக்கின்றோம்.

காயமே இது
பொய்யடா .வெறும்
காற்றடைத்த
பையடா..பாடலின்
பொருளறிந்தும்
புலனிழந்தோம்.

மாயைக்குள்
திண்டாடுகின்றோம்.
மாற்றங்களை
வெறுக்கின்றோம்.

ஏமாற்றங்கள்
புதிதல்ல
ஏமாறும் விதங்கள்
புதிது புதிதாக
காண்கின்றோம்.

நம்மில்
நாமே திருப்தி
காணாமல் வெளியே
தேடுகின்றோம்.

உழைத்து
பெறுவது வருமானம்.
உணர்ந்து பெறுவது
தன்மானம்.
இரண்டுமின்றி
மடிவது அவமானம்.

வாழ்க்கை
என்றும் வெகுமானம்.
ரசித்து வாழ்ந்தால்
அடையாளம்..

ஆக்கம் கவியர் ரி.தயாநிதி