நாங்கள் சில மனிதர்களை காணாமலேயே இருக்கிறோம்

நாங்கள் சில மனிதர்களை
என்றுமே சந்தித்ததில்லை
ஒரு மனிதனை சந்திக்காது
கடக்கின்றபொழுது
வாழ்க்கைக்கான
பிரம்மாண்ட அனுபவமொன்றை
இழந்துவிடுகிறோம்.
படிக்க படிக்க நிறைவில்லாத
அனுபவம் மனிதர்கள்!

மனிதர்களுக்கு, இரு கண்கள்
இரு கால்கள், ஒரு இதயம் மற்றும்
பல முகங்கள் இருக்கிறது
சிலர் ஒரு முகத்தை படித்துவிட்டு
ஒருவனை கொண்டாடத்
தயாராகின்றனர்
சிலசமயம்
ஒரு முகத்தோடு அலைபவனுக்கு
இவர்களாகவே பல முகங்களை
மாட்டிவிடுகின்றனர்

நாம் சில மனிதர்களை சந்திக்கவில்லை
சிறு தவறுக்காய் கொலை செய்பவனை,
நண்பனாய் பழகி மயக்க மருந்து கொடுத்து புணர்பவனை,
கண்தெரியாதவனிடம் காசு பிடுங்குபவனை,
காதலிக்க மறுத்ததால் ஆசீட் ஊற்றுபவனை,
மிட்டாய் வாங்கிக்கொடுத்து
அந்தரங்கத்தை தொடுபவனை,
காட்டிக்கொடுப்பவனை,
கதிரையில் கூராய் எதையும்
வைத்துவிடுபவனை,
உணவில் எச்சில் துப்பி கொடுப்பவனை,
நாம் இன்னும் பார்க்காமல் இருக்கலாம்

தன்னைவிட ஓடக்கூடியவனை
காணும்வரையிலும்
ஒருவன் தன்னையே வேகமானவன் என கருதிக்கொள்வான்
அழுகிய பழங்களை கலந்து விற்பவனை செய்பவனை காணும் வரையிலும் எல்லா கடைக்காரரும் நல்லவர்கள் என நம்புவான்
ஒருவனை மட்டுமே விரும்பிய ஒருத்திக்கு அவன் அதிக நல்லவனாக தெரிவதும் அதே அவன் விடும் சிறு தவறையும் பூதாகரமாய் பார்ப்பதும்
அவள் மனிதர்களை படிக்காததன் வெளிப்பாடுதான்

எல்லா மனிதருக்கும் ஒரு இதயம் இருந்தது
கடவுள் அவர்களுக்கு நறுமணத்திலான இதயங்களை வழங்கியிருந்தார்
பின்னர் அவர்கள் விதம்விதமான எண்ணங்களை ஊற்றி அதை நாறச் செய்தார்கள் இதயத்தில்
நாற்றம் அதிகம் எடுத்ததால் வாசனைத் திரவியங்களை பூசத் தொடங்கினார்கள்
அது நாற்றத்தை மறைத்தது
பலர் வாசனைத் திரவியம்தான் இதயத்தின் மணம் என்று தொடர்து நம்பிவிடுவதால்
இலகுவில் ஏமாற்றப்படுகிறார்கள்

நாம் சில மனிதர்களை சந்திக்காமல் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்
சில மனிதர்களை சந்தித்ததால் துன்பமாய் இருக்கிறோம்,
படிக்க படிக்க நிறைவில்லாத அனுபவம் மனிதர்கள்

சில மனிதர்களை சந்தித்தது வரம்
சில மனிதர்களை சந்திக்காமல் இருப்பது புண்ணியம்
சில மனிதர்களை சந்தித்தது பாவம்
சில மனிதர்களை சந்திக்காமல் இருப்பது பாவத்திலும் பாவம்

அனாதியன்
04-04-2017