நினைவுகளும் – நினைவூட்டல்களும் (மழை)ஆய்வாளர் க.முருகதாஸ்

மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடந்த கால நினைவுப் பதிவுகளாலும், எதிர்கால நினைவூட்டல்களாலுமே இயக்கப்படுகின்றான்.

இவ்விரண்டும் இல்லையெனில் மனிதன் நடைப்பினமாவான்.இயந்திரத்தால் இயக்கப்படும் பொம்மை போலாவான்.;

அன்றாடம் வாழ்வில் ஒவ்வொரு விநாடிப் பொழுதும் நடக்கும் சம்பவங்கள் நிகழ்வுகள், நடக்கும் விநாடிப் பொழுதுகளைக் கடந்து செல்லும் போது அவை நினைவுகளாக எமது முளையில் பதிவாகி விடுகின்றன.

இந்தப் பதிவுகள் யாவும் அப்படியே இடம் – பொருள் – காலம் என்ற முப்பரிமாண நிலையில் பதிவாகி அவற்றை நினைக்கும் தோறும் மேலெழுந்து மனத்திரையில் விரிகிறது.

மூளை என்னும் பெரும் களஞ்சியம் கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தில் நிகழ்வில் எதை நாம் நினைக்கிறோமோ அதை வெளிப்படுத்துகின்றது.

உலக மாந்தர் யாருமே இதற்கு விதிவிலக்கல்ல.

நல்லது கெட்டது எல்லாவற்றையுமே மூளை பதிந்து வைத்திருக்கிறது. கெட்ட சம்பவங்களை நாம் எப்படித்தான் மறக்க நினைத்தாலும் மூளை அதற்கு இடம் கொடுப்பதில்லை, ஊழல் செய்யாது இலஞ்சம் வாங்காது.

ஊரின் ஞாபகங்களை மனம் அசை போடுகின்றது. மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.

மழைக் காலத்தை நினைக்கும் போது சுவையாக இருக்கின்றது. முதலில் ஓலை வீட்டில் வசிந்திருந்தோம்.பின்னர் அஸ்பெஸ்டேஸ் கூரை போட்ட கல்வீட்டில் வசித்தோம்.

இந்த இரண்டு வீடுகளிலும் வசித்த போது ஏற்பட்ட மழைக்கால நினைவுகள் வேறு வேறானவை.

பகலில் பெய்யும் மழையின் ஒலியும் இரவில் பெய்யும் மழையின் ஒலியும் வித்தியாசமானவை போல் தோன்றும்.

அதற்குக் காரணம் பகலில் தோன்றும் வேறு வேறு ஒலிகளின் கலவை மழையின் இயல்பான ஒலியை உள்வாங்கிவிடும்.

மழை பெய்யும் போது இருக்கும் பவனச்சூழ்நிலையும் (Atmosphere) இதற்குக் காரணமாகிவிடும். காற்றின் தன்மையைப் பொறுத்து மழை ஓசையில் வேறுபாடு தென்படும்.

பகலில் பெய்யும் மழையை செவி உள்வாங்கி இரசிப்பதற்கும் இரவு மழையை செவி உள்வாங்கி இரசிப்பதற்கும் வேறுபாடு உண்டு.

ஓலை வீட்டில் நாங்கள் குடியிருந்த போது மழைக்காலங்களில் உறக்கத்தில் இருக்கையில்( இரவு 12,1மணியளவில்) பெய்யும் மழை உறக்கத்தை தாலாட்டுவது போலவே இருக்கும்.

ஓலைக்கூரையில் மழைத்துளிகள் விழும் சத்தம், கூரையிலிருந்து வழிந்து தாழ்வாரத்தில் ஓலைக்கீற்று வழியாக லல்ல….ல்லல்…என்ற ஒலியோடு நிலத்தில் வழிய வழிந்த தாழ்வார நிலம் குழியாகி வழியும் நீர் டுக்டுக் என ஓசை எழுப்பும்.

வெயில் காலம் முடிந்து வரும் முதல் மழையானால், மழையும் மண்ணும் சங்கமித்து மண்வாசனை வரும்.
கூரை வீட்டில் மழை விழும் ஓசை ஏதோ ஒருவித சங்கீதமாகவே எனக்குக் கேட்கும்.

மழையை இரசித்துக் கொண்டே நித்திரை கொள்வேன். விழிப்புக்கும் நித்திரைக்கும் இடையில் ஒரு சுக உணர்வை மழை கொடுக்கும்.

சிறுவனாக இருந்த போது இரவு மழை நேரங்களில்‘ எமக்கு வீடு இருக்கிறது, மழையில் நனையாமல் இருக்கிறோம். காகங்கள்,குருவிகள், கோழிகள் அணில்கள் நனையாமல் இருக்குமா என்று நினைத்து காகங்கள் குருவிகள் கோழிகள் மரத்தின் இலைகளுக்கு கீழ் இருக்கும் அணில்கள் பனை ஓலைகளின் கீழ் அல்லது காய்ந்த கொக்கறைக்கு உள்ளே போய் இருக்கும் என கற்பனை செய்து திருப்திப்படுவேன்.

மழைக்காலமும் கல்வீடும் இனி அடுத்த பதிவில்.

எனது இந்தப் பதிவை வாசிப்பவர்கள் மழைக்காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிருங்களேன்….

ஆக்கம் ஆய்வாளர்  க.முருகதாஸ்

Merken

Merken