நினைவுப் பதிவு -எஸ்,கே பரராஜசிங்கம் பற்றி கோவிலுர் செல்வராஐன்

பரா அண்ணன் என்று நான் அன்போடு அழைப்பேன்..
நான் இலங்கை வானொலியில் பணிபுரிந்த போதே பரா
அண்ணனுடன் நெருங்கிப் பழக முடிந்தது.அதற்கு முன்னரே
நான் அவரின் ரசிகன்..பள்ளியில் படிக்கிற காலத்திலே இவரின்
வானொலி நிகழ்ச்சி தொகுப்புக்களை நான் கேட்டு மகிழ்ந்ததுண்டு.
இசை ஞானம் கொண்ட,இலக்கிய அறிவுமிக்க ஒரு அறிவிப்பாளராக அன்று இலங்கை வானொலியில் வலம் வந்தார். நான் மெல்லிசை
துறையில் இணைவதற்கு முன்னரே அவரின் பாடல்கள் மிகப்
பிரபல்யமாக இருந்தன..நான் இணைந்தபின் அது மிகவும் மெருகேறியது.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை
தயாரித்து வெளியிட்ட ..கங்கையாளே.. என்ற இசைத்தட்டு முதல் மெல்லிசைத் தட்டாகும்.இதை முன்னின்று தயாரித்து வெளியிட்டவர் பரா அண்ணனே. மெல்லிசைகென்றே அமைந்த இனிமையான குரல்
இவருக்கு இயல்பாகவே இருந்தது.

*குளிரும் இரவினிலே.இருபறவை…
வளரும் நிலவினிலே,,,ஒரு பிரிவு.
நிலவும் சுடுவதுமேன் நீ இல்லைஎன்றால்…
என்ற பாடலும்…

*சந்தணமேடையின் இதயத்திலே உன்
சலங்கையின் நாதம்தான் கேட்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி-வண்ண
மாமயிலே ஏன் தயக்கமடி….
என்ற பாடலும்…

மற்றும் ..அழகான ஒரு சோடிக் கண்கள்..,கங்கையாளே கங்கையாளே காடு கழுவிவரும் கங்கையாளே..என்ற பாடலகளும்
இவரின் நினைவுகளை இன்னும் என்னுள் மீட்டிக்கொண்டே இருக்கின்றன.நான் பாடல்கள் எழுதி,பாடத் தொடங்கியபோது என்னை தட்டிக்கொடுத்தவர். நாவல்கள்,எழுதியபோது படித்துவிட்டு
பாராட்டியவர். ஒருநாள் அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு.
.கோவிலூர், வீட்டுக்கு ஒருதரம் வரமுடியுமா?(திம்ப்ரிகசாயாவில்)
வருகிறேன் அண்ணே ..என்று செல்கிறேன். அங்கே ஒருவர் இருந்தார்.
பரா.அண்ணன் அவரை எனக்கு அறிமுகம் செய்தார்.
இவர் மிஸ்டர் மயில்வாகனம் லண்டனில் இருந்து வந்திருக்கிறார்.
நீர் ஒரு..ஜிங்கில் (வானொலி விளம்பரம்) எழுத வேண்டும்.என்று.
நான் பிரமையில் இருந்து விடுபடவில்லை.காரணம்.இலங்கை வானொலியை தமிழகம் வரை மட்டுமல்ல தென்னிந்தியாவுக்கே
தனது அறிவுப்பு யுக்தி கொண்டு பிரபலப் படுத்திய எஸ். பி மயிவாகனம் அவர்களை நான் என் வாழ்நாளில் காணுவேனோ என்று எண்ணவே இல்லை. நான் சிறுவனாக இருக்கும்போது கொடிகட்டிப் பறந்தவர்.அவரை நேரில் பார்த்ததும் பூரித்துப் போனேன்.
அதுவும் அவருக்கே ஒரு ஜிங்கிள் எழுதப்போகிறேன் என்ற இன்ப அதிர்ச்சி வேற.இதை ஏற்படுத்தித் தந்தவர் பரா அண்ணன் அவர்கள்.

இவர் அன்று வழங்கிய .இதய ரஞ்சனி ..நிகழ்ச்சி இன்றும் மனதினில் நிற்கிறது. எப்பொழுதும் வெள்ளை ஆடைகளையே அணியும் அவர்.தனிக்கட்டையாகவே வாழ்ந்தார். அவர் காதல் வயப்பட்டதுண்டு
என்று நான் அறிந்ததுண்டு.ஆனால் அது கைகூடவில்லையாம்.
அமரராகிவிட்ட எஸ்.கே பரராஜசிங்கம் இன்றும் என்னைபோன்ற அவரது சக பணியாளர்கள் மனதில் நீங்காது இருக்கிறார்.