நிலங்களை நேசிப்பவனும் அறுவடையை யாசிப்பவனும்

இப்போதிருக்கும் நிலத்தில் நின்று
வெளியே வா என்னும்
என் நண்பனுக்கு தெரியாது
நான் நிகழ்த்தவேண்டிய அறுவடை பற்றி.
நிலங்களோடு முகம் சுழித்துக் கொள்பவனால்
அறுவடை முகவரிகளை
எப்போதும் எழுத முடிவதில்லை என
பாடம் நடத்த
எனக்கு இப்போது பொழுதில்லை.
நிலங்களை மாற்றி மாற்றி பயணிக்கும்
எனதருமை நண்பனே!
நிலங்களை நேசிப்பவனுக்கும்
அறுவடையை நேசிப்பவனுக்கும்
ஒரு கோட்டில் பயணம் சாத்தியமில்லை என
இன்னும் யாரும் உரத்துச் சொல்லவில்லை.
நிலம் யாருடையது என்பதை
நான் ஒருபோதும் ஆராய்ந்தது கிடையாது.
அறுவடை யாருக்கானது என்பதைத் தவிர.
என்பதை
நீ மார்க்சியம் என்பாய்
தலித்தியம் என்பாய்
இருப்பியல்வாதம் என்றும்
கட்டமைப்பியல் மோகம் என்றும்
நிறுவிடப் பார்ப்பாய்.
உலகமய வாதம்,
நவவேட்கைவாதம்,
பொருள்முதல் வாதம்,
காப்பிரேட் கலாசாரம்,
என என்னென்னவோவெல்லாம் அடுக்கி வைப்பாய்.
நாளைக்கு அறுவடை நாள்.
முடிந்தால் என் நிலம் வந்து மிதி.
நாளை தப்பினால்
மறு நாள் சணல் விதைப்பு.
தரிசு நிலங்களை மட்டுமே
அடிக்கடி தரிசித்த நீ
சணல் விதைப்புக்கு முந்திய
என்
அறுவடை நாளை
ஒரு முறை விழிகளால் வந்து விழுங்கிக் கொள்.
அறுவடை நேசித்த எனக்கு
நிலம் தான் இல்லை.
நிலத்தை நேசித்த உனக்கு
அறுவடை கூட இல்லை.
என் அறுவடை என்னவோ
நிலப்பிரபுவுக்குத்தான்
ஆனால்
“சோறு” என் ஏழைகளின் வயிற்றுக்கானது.
மறந்துவிடாதே
நாளைக்கு அறுவடை நாள்.
முடிந்தால் என் நிலம் வந்து மிதி.

– சாம் பிரதீபன் –