பனிமுட்கள். .!

பனித் தேசத்தில்
இப்போ
மரங்களுக்கு
விடுமுறை

பூப்பெய்துவது இல்லையென
பூக்கள் கூட
வெளிநடப்பு
செய்து விட்டன

பறவைகளைக் கூட
காணோமாம். – அவை
தூர தேசத்துக்கு
பறந்து விட்டன போல

பனிகள் மட்டும் – தாம்
பூப் பூப்பதாய்
ஆசை வார்த்தை காட்டி
மரத்தின்
நுணியில் உக்கார்ந்து
மேனி முழுதும் படர்ந்து
பின் புணர்ந்து

உரு மாற்றி
அழகாக்குவதாய்
வெண் பனி முள்ளாகி
தலை விரி கோலமாய் மரம்

விலகவும் முடியாமல்
இசையவும் முடியாமல்
உணர்வற்ற ஜடமாக
குளிரோடு மாரடித்துக் கிடக்கிறது.

கதிர் வந்து
சமாதானம் பேசியும்
பனியது உருகாமல்
பேரம் பேச

அமைதி யெனக்
கூறிக்கொண்டு இந்திய
இராணுவம்
இலங்கைக்கு வந்தது
போலத்தான்.

புன்னகைப் பூவாய்
மரத்தின் நுனியில்
உக்கார்ந்த பனியும்
முள்ளாகி

மரத்தின் வாழ்வு
கேள்விக் குறியாகி
நாடு விட்டுப் போன
தன்னோடு வாழ்ந்த
பறவைகளின்
வரவுக்காக காத்துக்கிடக்கிறது

அந்த வசந்த கால
நினைவுடன்
புது வருடமும் பிறக்கிறது
பனி அகன்று மரம்
விருட்சமாகட்டும்

விழுது விட்டு – தமிழர்
வாழ்வு மோட்சம் காணட்டும்.

இணுவையூர் சக்திதாசன்