பொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் 

என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் முதலாவது நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு சிவா entertainments மூலம் கொழும்பில் பல பொப் இசை நிகழ்சிகள் செய்தோம் அதில் மனோகரன் அவர்கள் முன்னணிப் பாடகராக இருந்தார்.சுகததாச உள்ளரங்கில் ட்ரிப்பிள் எம் என்று ஒரு நிகழ்ச்சி செய்தோம்,மனோகரன்,மில்டன் மல்லவாராச்சி,மநூர்ஜான் ஆகிய மூன்றுபேரையும் வைத்து செய்த நிகழ்ச்சி அதில் நண்பர் மனோகரன் அரங்கில் தமிழ்,சிங்களப்பாடல்கள் பாடி அசத்தினார். ஹட்டன் கந்தையா அவர்களின் ஏற்பாட்டில் ஹட்டனில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றோம் கண்ணன்நேசம், மனோகரன் ,கணபதிபிள்ளை ,ஹெலன் குமாரி கலாவதி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சி,அதில் கடைசியில் கலைஞர்களின் கொடுப்பனவுகளை கொடுக்காமல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் தலைமறைவாக, எங்களை ஹட்டன் ரயில்வே ஸ்டேசனில் இருக்கச் சொல்லி ஒரு மணி நேரத்தில் உரியவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று எல்லோருக்கும்தந்த அந்த கெட்டித்தனம் மனோ விடம் நான் அன்று கண்டு வியந்தது.அதன் பின் அவர் கொள்ளுப்பிட்டி 676 தொடர் மாடியில் தங்கி இருந்த நேரம் அடிக்கடி நான் அவரை அங்கு சந்திப்பேன் கலகலப்பான பேர்வழி இது எல்லோருக்கும் தெரியும்.நான் புலம்பெயர்ந்து நோர்வே வந்தபின் அவர் ஒஸ்லோவுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார் ஒஸ்லோவில் வைத்து நான் பாடல் எழுத குட்டி மாஸ்டர் இசையில் பாடினார். தமிழ் நாட்டில் இருந்து சிலோன் மனோகரன் என்று பல திரைப்படங்களில் நடித்தார்.நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் மறைந்து இன்று ஒருவருடமாகின்றது .அவரோடு பழகிய தருணங்கள் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது.கடந்த வருடம் அவர் தமிழ்நாட்டில் ஒரு அனாதை போன்று இறந்து விட்ட செய்தியும்,படங்களும்,காணொளியும் பார்த்து நெகிழ்ந்துபோனேன்.கொழும்பில்இறந்து கணத்தைமயானத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கில் அவர் ரசிகர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள் அவரை வழியனுப்பி வைப்பதற்கு..சிங்கள சகோதரர்கள் பெருமளவில் வந்திருப்பார்கள்..என்ன செய்வது ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் இப்படிதான் இறுதிப் பயணம் அமையும் என்று தீர்மானிக்கின்றார் போலும். இவருக்கு இப்படி அமைந்துவிட்டது. அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

கவிஞர் பாடகர் பகிர்வு கோவிலுர் செல்வராஐா