முரண்…

நீண்ட இரவொன்றில் தனித்திருந்தேன்
நட்சத்திரங்களை ஒன்று விடாது
எண்ணிக்கொண்டிருந்தேன்..

பஞ்சுபாதங்களை வைத்து பூனை
பவ்வியமாக நடப்பதுபோல
மெல்ல அருகே வந்தாய்
மௌனமாகவே இருந்தாய்..

போர்ஓய்ந்த பின்னான மயான அமைதி
எம்மிருவருக்குள்ளும் நீண்ட நேரமாய்
வானத்தை வெறித்தபடி நீயும் நானும்..

வார்த்தைகளை மென்றபடி நானும்
மணிக்கணக்காக யன்னலோரமாய்
எள்ளளவும் விட்டுக்கொடுக்காத நின்
பிடிவாதமும்..

நீ பிடித்த முயலுக்கு முன்றுகால் என்றது
நின் மூர்க்கத்தனமான நின் கோபம்
என் கடைக்கண்களோ கொஞ்சம் இரசித்து சிரித்திட..

செவ்விதழ்கள் பாடிய காதலோ குற்றுயிராக
வற்றிய குளத்தில் செந்தாமரையாக
வாடியும் வதங்கியும்..

பொய்யாமொழி வள்ளுவனாய்
குறள் வார்த்தை சொல்வாயா என்ற
சிறிய ஒரு நப்பாசை மனதிற்குள்
இழையோட..

குரங்கின் கை பூமாலையாக
உதிர்ந்து போன காதலை
பொறுக்கியெடுக்க எண்ணிய
மனதில் வந்து அமாவாசை
குடிகொண்டது..

பௌர்ணமிக்கான காத்திருப்போடு
பிடிவாதம் தளராத மனசிற்குள்
படிமானமற்ற கவிதையாக
முரண் முதலாகியது….

ரதிமோகன்