முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா.04.03.2018

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியத்துவமிகு மாங்குளத்தில் இடம்பெற்ற ‚முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் ஏ9 சாலையில் முக்கியத்துவமிகு மையமாகவும், ஈழப்போராட்ட வரலாற்றில் முக்கிய பக்கங்களைக் கொண்டதுமான மாங்குளம் மண்ணில் ஒரு வெளியீடு. திருமுறிகண்டியைச் சேர்ந்த படைப்பாளி முறிகண்டி யே.லக்சிதரன் எழுதிய ‚என் பயணம்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 04.03.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 சாலையில் அமைந்துள்ள மாங்குளம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. முன்னதாக விருந்தினர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் தொகுத்தளித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. வரவேற்பு நடனத்தினை மாணவி மகேந்திரன் கம்ஷிகா வழங்கினார். வரவேற்புரையினை கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார்.

ஆசியுரையினை அமெரிக்கன் சிலோன் மிஷன்(யாழ்ப்பாணம்) தலைவர் அருட்பணி ரி.தேவநேசன் அடிகளார் வழங்கினார். முல்லைத்தீவு மாவட்ட மற்றும்ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சம்மேளனம் வெளியீடாக வெளியாகும் இந்நூலின் தலைமையுரையினை நிகழ்வின் தலைவர்முல்லை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் சுஜாந் நிகழ்த்தினார். வாழ்த்துக் கவியினை கவிஞர் காக்கேயன்குளம் ஹுசேன் வழங்கினார்.

வாழ்த்துரைகளை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் கு.சரோஜாதேவி, முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா, கவிஞர் வே.முல்லைத்தீபன் ஆகியோர் நிகழ்த்தினர். கொ.கொன்சிலா குழுவினரின் கிராமிய நடனமும் நிகழ்வினை அலங்கரித்தது.

வெளியீட்டுரையினை முல்லை மாவட்ட இளைஞர் சம்மேளன செயலாளர் மா.சசிக்குமார் நிகழ்த்தினார். நூலினை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் கு.சரோஜாதேவி வெளியிட, முதற்பிரதியினை நிகழ்வின் பிரதம விருந்தினரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ‚என் பயணம்‘ கவிதை நூலின் ஆய்வுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வவுனியா ‚தமிழ் விருட்சம்‘ அமைப்பு சார்பாக அவ்வமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நூலாசிரியருக்கான கெளரவிப்பு இடம்பெற்றது. அத்துடன் கவிஞர் மன்னார் பெனில் அவர்களும் நூலாசிரியருக்கான கெளரவிப்பினை அளித்தார். தொடர்ந்து யாவருக்கும் நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் சிறப்பம்சமாக விஜய் பதிப்பகம் உரிமையாளர் எஸ்.விஜய் நூலாசிரியரின் 50 நூல்களை குறித்த பதிப்பகத்தினால் கொள்வனவு செய்யும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் நிகழ்த்தினார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் முறிகண்டி யே.லக்சிதரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் நூலாசிரியரின் பெற்றோர்களும் ஊர்ப்பிரதிநிதிகளால் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இளைய, மூத்த படைப்பாளிகள் அநேகர் நிகழ்வில் கலந்திருந்தமை நற்பதிவே. சமூகத்தின் அனைத்து துறைசார்ந்தவர்களும் நிகழ்வில் நிறைந்திருந்தனர்.

போர் முடிந்த ஈழத்தின் வன்னியிலே, மாங்குளத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு தமிழ் மண்ணுக்கு இன்னுமொரு முக்கிய பதிவே.