முள்ளிவாய்க்கால் விலைதந்த படிமங்கள்

நந்திக்கடலே! நீ ஏன்
என்னோடு கோபம்
விந்தைக்குரிய மௌனமதை
விளங்கவில்லை நானும்…
துள்ளிக்குதிக்கும் புன்சிரிப்பாய்
உன்னுள் ஆர்ப்பரிக்கும் அலைகள்
ஆரவாரமின்றி ஏன்
அமைதியாய்க்கிடக்கின்றன…
நீரின் மடியிலே நீ
சுமந்திருக்கும் பெருநெருப்பு,
தமிழ் வீரப்போர் மரபுகளைப்
பொத்திவைக்கும் உன்பொறுப்பு,
எத்தனை பெரிய எரிமலையின்
மூச்சுக்களை அள்ளிச்
சேர்த்த அரவணைப்பு,
முள்ளிவாய்க்கால் விலைதந்த
படிமங்கள் அவையனைத்தும்
தாங்கிக்கொள்ளும் அருஞ்சிறப்பு…
இத்தனை கொண்டும் எப்படி
நீ மௌனமாய்?
உன் கோபம் புரிகிறது புனலே…
வருகிறேன் மீண்டுமென வந்தவன்
இன்னும் வரவில்லை…
வந்த இடத்தில் வாழ்வை வழிசெய்ய
எண்ணிக் கிடக்கிறான்…
பெறுகிறேன் உனக்காய் என
உரைத்த எதையும் இதுவரை பெறவில்லை
யாரோ தரும் பெறுபேறுகளுக்காய்க் காத்துக்கிடக்கிறான்…
மருள்நிறைந்த மயக்கத்தில்
இன்னமும் விடுபடவில்லை
தெருமுனையில் ஒளிரும்
விளக்கொளியில் காவல்கிடக்கிறான்…
குருடர் தடவிய யானையின் உருவம்
இன்னமும் விளங்கவில்லை
வருகிறவழியில் கிடைத்த
கொடிகளோடும், கொள்கைகளோடும்
காலத்தைக் கரைத்துவிட்டான்…
காயங்கள் சுமந்து நின்ற
கண்ணீரோ ஆறவில்லை
‘காட்டிக் கொடுப்பவன்’ எனும்
கதையளப்பில் துடிக்கின்றான்…
தாண்ட முடியாத தடையைன்றெண்ணி
களைப்புற்றானோ தெரியவில்லை..
தோண்டி எடுக்காமுடியா ஆழத்தில்
உன்னைப்போல் உணர்வுகளைச் சேமித்துக் கிடக்கின்றான்…
என்னவழி செய்வான்?
ஏது நிலை அறிவான்?
எண்ணத்துள் உன் அலையாய்
ஏற்றம்பெறத் துடிக்கிறான்…
எடுத்தியம்பு எம்வழியை
ஏக்கத்தில் உன் பிள்ளை…
-காந்தள் (வாணி தனேஸ்)