மூத்த கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ்பற்றி கி.தீபன்!

இன்று என்னைப் போன்ற இளம் கலைஞர்களை சலிப்படையாமல் தொடர்ந்து பயணிக்கும் வழி காட்டி இயக்கும் இவர்; *நீந்தத் தெரியாத மீன்கள்* திரைப்படத்தின் இயக்குனர் என்பது இன்றைய இளம் படைப்பாளிகள் சிலர் அறியாத திரைக்கலைச் செய்தியாகும்.

கற்றல்- கற்பித்தல் மூலம் தெரிந்து கொண்ட பல்கலை இரகசியங்களைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருந்து. நான் இயக்குகின்ற படைப்புகளில் எல்லாம் அதைக் கிள்ளி எடுத்து விதைக்கும் கலை அவதாரம் இவர்.

கலைஞர்களாக‌ இவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு நீண்டு விரிந்திருந்தாலும், நான் இயக்கிய அம்மா என்ற படைப்பில்தான் முதன் முதலாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நான் இயக்குகின்ற ஒவ்வொரு படைப்பிலும் அம்மா என்று நான் வியக்குமளவுக்கு நடித்து வருகின்றார்.

இந்தக் கலை எனக்கு சோறு போடாது போனாலும். சோகங்களைத் துடைத்து, சோர்வைத் தொலைத்து, தொலைந்த நினைவுகளை வேர‌றுத்து, சந்தோஷங்களை மனதில் ஊன்றுகின்ற போதிலும்; இவரைப் போன்ற மூத்தவர்கள் என் படைப்புகளில் நடிப்பது பேரானந்தத்தைத் தருகின்றது.

இந்தப் பெரும் கலைஞரை அதிகமான படைப்புகளில் இயக்கியது நான் மட்டும்தான் என்று கொஞ்சம் கர்வமாகச் கூறினால் கூடத் தகும்.

இதுவரை காலமும் பல இயக்குனர்களிடம் நடித்த அனுபவ முதிர்ச்சி இவரிடம் இருந்தாலும் கூட, என்னைப் போன்ற இளம் இயக்குனர்கள் சொல்வதை எல்லாம் மறுக்காமல், அதைத் திருத்தி எங்கள் எண்ணங்களைச் சீர் குலைக்காமல், ஒரு குழந்தைக் கலைஞராக‌ நடிப்பதால்தான் வெற்றிடமில்லாத பெரு வெற்றிகளோடு இவரால் பயணிக்க முடிகின்றது.

இவரைப் போன்ற மூத்த கலைஞர்கள் என்னுடன் சேர்ந்து பயணிப்பதும், இவரைப் போன்ற கலை முதிர்ச்சிகளை நான் இயக்குவதும், மனதுக்கு நிறைவைத் தந்து. என்னை நிறைவடையாத் தேடல்களை நோக்கித் தள்ளுகின்றது.

நண்பர்கள் யாராவது வேண்டும் என்றே எனது படைப்புகளுக்கு எதிர் விமர்சனங்களைக் கூற விரும்பினால்; நான் அவர்களுக்குக் கனிவோடு கூற விரும்புவது. கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களே எனது படைப்புகளில் விரும்பி நடித்து வருகின்றார் என்பதை மட்டும்தான்!

பலராலும் நேசிக்கப்படுகின்ற‌ இந்த மனிதர். பலராலும் விரும்பப்படுகின்ற‌ இந்தக் கலைஞர். நோய்களை நொடியில் தொலைத்து, சுகங்களை வாரிக்குவித்து, ஆண்டுகள் நூறு இனிதே வாழ்ந்திடப் பிரார்த்தனைகளோடு… வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!