மெல்ல நடக்கின்றாள் அவனோடு…

 

நிலா தரும் ஒளியினிலே
நிலாமகள் கைகோர்த்து
மெட்டி தரும் நாதத்தில்
மென்பாதங்கள் நர்த்தனமிட
மெல்ல நடக்கின்றாள் அவனோடு……

நிலாக்கீற்றின் தழுவலால்
வெண்மணற்பரப்புக்கள்
நித்திலங்களாய் கண்பறிக்க
நட்சத்திரங்கள் கண்சிமிட்டி
நல்வாழ்த்து பூச்சொரிய
நங்கை நடக்கின்றாள்
நாயகனோடு…

இன்னிசை தென்றலிசைக்க
இதமாய் அலைகள் பாதம் தொட
இதழோடு இதழ் தந்த முத்தங்களால்
இளையவள் நாணம் கொண்டு
மௌனமொழி பேசிக்கொண்டு
மங்கை நடக்கின்றாள்
அவனோடு………!

மொட்டு விட்ட மல்லிகைச்சரம்
கமகமக்க வழிதோறும்
கட்டவிழ்ந்த கருங்கூந்தல்
காற்றினிலே அலைபாய
கோதையவள் அவனோடு
மெல்ல நடக்கின்றாள்
கைகோர்த்து…..!

ரதிமோகன்