{{{யார் குற்றம்}}}

தண்ணி அள்ளவென்று அவளும்
தனியாக போனது குற்றமா ?
தண்ணி அடித்து விட்டு அவனும்
தள்ளாடி நடந்து வந்தது குற்றமா?
தரை தெரியாது அவனுமங்கே
தடுமாறி விழுந்து கிடந்தது குற்றமா ?
தாகத்தை தீர்க்கவென்று அவனுக்கு
தண்ணீர் கொடுத்தது அவள் குற்றமா ?
தாகம் தீர்ந்ததும், அவன் தனது
தாபம் தீர்க்க எண்ணியது குற்றமா?
தரக்குறைவாக அவளையவன்
தாவியனைக்க முனைந்தது குற்றமா ?
தப்பித்துக் கொள்ள அவனையவள்
தலையில் அடித்தது தாக்கியது குற்றமா ?
தாளாத வலியினால் அவனங்கே ,
தரையில் சாய்ந்து, இறந்தது குற்றமா?
தாவணி கிழிந்த படி அவளும்
தன் வீடுநோக்கி விரைந்தது குற்றமா?
தருணம் அறியாத ஊர்மக்கள் பாடிய
தறிகெட்ட வசைகள் தான் குற்றமா?
தன்மானம் காக்கவென்றே அவளும்
தற்கொலை செய்துகொண்டது குற்றமா?
தரணியிலே பெண்ணாய் அவளும் அவ –
தரித்தது தானும் அவள் குற்றமா ?
தண்டனைக்குரியது யார் குற்றம்?
தண்டிக்கப்பட்டது எவர்குற்றம் .?
நீதி நேசன்