யேர்மனியில் க. வாசுதேவனின் ‚பிரஞ்சுப் புரட்சி‘

கடந்த 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று க.வாசுதேவன் அவர்களுடைய ‚பிரஞ்சுப் புரட்சி‘ நூல் அறிமுகம் யேர்மனியில் நடைபெற்றது. நான் அங்கம் வகிக்கின்ற பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. முற்பகல் 11.30 மணி அளவில் நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வு ஆரம்பிக்கின்ற போதே 40 பேருக்கு மேற்பட்டவர்கள் மண்டபத்தில் இருந்தார்கள்.

நான், திரு பாக்கியநாதன், திரு ராஜ்சிவா ஆகியோர் நூல் சார்ந்த ஆய்வுரையை நிகழ்த்தினோம். நான் வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த பார்வையை செய்தேன். பாக்கியநாதன் அவர்கள் வரலாறு மற்றும் நூலில் கையாளப்பட்டுள்ள எழுத்து நடை பற்றிக் கூறினார். ராஜ்சிவா அவர்கள் ‚இது ஒரு முக்கியமான நூல் என்றும், ஆனால் ஒரு நேர்கோட்டுத் தன்மையில் எழுதப்பட்டுள்ளது‘ என்கின்ற விமர்சனத்தை முன்வைத்தார். நிகழ்வு விறுவிறுப்பாக நடைபெற்றது.

பார்வையாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தார்கள். மொத்தம் 72 பேரை தான் எண்ணியதாக நண்பர் ஒருவர் கூறினார்.

நூலை பார்வையாளர்கள் வரிசையில் நின்று வாங்கினார்கள். கொண்டு வந்த நூல்கள் முடிந்து, மேலும் 15 நூல்களுக்கு முற்பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது. நூலாசிரியர் க.வாசுதேவன் கடைசியில் ஏற்புரை நிகழ்த்தினார். வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார்.

பிற்பகலில் திரு ஞானதாசின் ‚புங்குடுடு தீவு – சிதைவுறும் நிலம்‘ ஆவணப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் ஞானதாஸ் அவர்கள் நேரடியாக யேர்மனிக்கு வந்து அவருடைய படங்களை திரையிரங்கில் திரையிடுகின்ற திட்டம் இருப்பதால், இந்தப் படம் பற்றிய விளம்பரத்தை தவிர்த்திருந்தோம். இதையும் விளம்பரப்படுத்தியிருந்தால், என்னுடைய மண்டபம் காணாத நிலை வந்திருக்கும். திருநாவுக்கரசு சர்வோதயா நற்பணி மன்றத்தினருக்கு மட்டும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தோம். அவர்கள் ஒரு 20 பேர் அளவில் வந்திருந்தார்கள்.

ஆவணப்படத்தின் போது பார்வையாளர்கள் சில கட்டங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டும், சில கட்டங்களுக்கு கைதட்டியும், சில கட்டங்களுக்கு சிரித்து ஆரவாரித்தும் படத்தை உற்சாகமாக பார்வையிட்டார்கள்.

இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளோடு அன்றைய நாள் மிகுந்த மனநிறைவை தருவதாக அமைந்தது