வழித்தடம் மறந்த நதிகள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்மட்டுநகர் கமல்தாஸ்

 

ஆண்ட பரம்பரை
வழித்தோன்றலில்
உதித்தவர்கள் நாங்கள்

வந்தாரை வாழவைத்து
வந்தேறிகளிடம் வளமிழந்து போனோம்

நீரின்றி அமையாது உலகு
நீருக்காய் போராடிச்சாகின்றோம்

வந்த வழி மறந்து
வழிகாட்டியவர்களை வதம் புரிந்த
வஞ்சகர்கள் நடத்தும் கொலைக்களத்தில்
வரலாற்றை காப்பாற்ற
போராடிய புனிதர்களை
வதம் புரிய கரம் நீட்டியது உலகம்

நாதியற்று நடைப்பிணங்களாக
நடுத்தெருவில் கிடக்கின்றோம்
ஓடும் நதியில் நீரள்ளிப்பருக
அனுமதியில்லை எங்களுக்கு

இன்றைய புதுமைகளை
எங்கள் முதுமைகள் கண்டு பிடித்தார்கள்
அன்றே
இன்று யாரோ பெயர்களில்
நவீனத்துவங்கள்

ஆழிப்பேரலையால் அழிந்து போன
இருப்புக்களை இட்டு நிரப்ப முடியாமல்
இரவல் சீவிதம் நடத்தும் வேளையில்
இவ்வுலகம் பகைவரோடு
இணைந்து இடி போட்டுக்கொண்டது

இடுக்கண் வலியை
இடித்துரைத்தோரை
இழுத்து அழித்தார்கள்
இடங்கேட்டுஎங்களினம் இல்லாது போக

ஒற்றைத்தமிழன் உள்ளவரை
ஓயாது எங்கள் போர்
வேற்றுமை கொண்டு
வெறுப்புடன் தந்த வலிகள்
அகலாது மனங்களிலிருந்து

இடுகாடு செல்லும் வரை
இயலாது என்ற ஒன்று இருக்காது

உருக்குலைந்து போவோமென
உறுதியாய் நம்பிட வேண்டாம்
உறுதியில் செய்த உடல்கள்
உருக்குலைந்து போவதில்லை

மட்டுநகர் கமல்தாஸ்