வாழ்வுதிரும் நாள்கள்

பாழடைந்த மண்வீட்டில்
கரையான் புற்றைப் போல்
ஒவ்வொரு இரவும்
உச்சம் தொடுகிறது விலையேற்றம்
பெறுமதியிழந்து போன
அச்சுத்தாள்களிலெல்லாம்
பொருளற்றுக்கிடக்கிறது
வெற்று எண்களின் எண்ணிக்கை
வாழ்க்கைச் செலவுகளின்
பயப்பீதியில் கொடுநோயாளியாய்
ஒவ்வொரு நாள்களையும்
ஏக்கம் கொண்டே கடக்கவேண்டியிருக்கிறது
தினம் தினம் செய்திகளெல்லாம்
பேரிடியாய் வந்து வீழ்கிறது
ஏழைகளின் அடிவயிற்றில்
பெரும் சாபக்கேடாகவே
மாறியிருக்கிறது
அடித்தட்டு மக்களின்
ஒருவேளைக்கான உணவு
பதுக்கல்களும் தட்டுப்பாடுகளும்
தாராளமாகிப்போன இந்நாள்களில்
காணாமற் போனோர் பட்டியலில்
இணைந்திருக்கிறது மனிதநேயம்!
நடுச்சாமம் ஆகியும்
ஓயாமல் அழுதுகொண்டிருக்கிறது
இங்கே ஓர் பசி நிரம்பிய ஏழைக் குடிசை!

  • வேலணையூர் ரஜிந்தன்.