Breaking News

„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை

„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை அவர்கள்…
(ஓய்வு பெற்ற கண்டி திரித்துவக்கல்லூரி ஆசிரியர்)

கலை இலக்கிய ஆளுமையும், எளிமையும், நட்புறவும் கொண்ட மிகப்பெரும் கலைஞன் நவாலியூரான்.
இவர் நாடகம், திரைப்படம், நாவல், சிறுகதை, கவிதை,
சிந்து நடைக்கூத்து எனப் பல துறைகளில் வல்லவர்.

பிரான்சில் இருந்து வெளியிட்ட
„காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்து கலைஞர்கள்“
என்ற வரலாற்று பதிவில்,
„கலாபூஷணம்“ நவாலியூர் நா. செல்லத்துரை அமரர்
பெருந்தகை பற்றி நிறையவே எழுதியுள்ளேன்.

கலை உலகில் மக்கள் மனங்களில் மரணிக்காத மனிதர்களில்
எங்கள் நவாலியூர் நா. செல்லத்துரை மாஸ்ற்றரும் ஒருவர்!

எங்கள் தமிழ் மண்ணில் ஒரு கலைஞனின் பெயரில் ஒரு கலையரங்கம் இருக்கின்றதென்றால் அது நவாலியிலுள்ள
„நவாலியூர் நா.செல்லத்துரை கலையரங்கம்“ ஒன்றுதான்

இந்தக் கெளரவம் இதுவரை வேறு எந்தக் கலைஞனுக்கும் கிடைக்கவில்லை!

மனிதர்கள் கை அசைக்க, மரங்களில் உள்ள பூக்கள்,
இலைகள் எல்லாம் தலை அசைக்க
உங்களின் இறுதிப் பயணம் அசைந்து செல்ல
கோடை வெய்யிலிலும் வானம் மழை பொழிவது போல
உங்கள் நண்பர்கள், உறவுகள்,ரசிகர்களின் கண்களிலிருந்தெல்லாம்
கண்ணீர் மழை பொழிந்தது!

காலத்தை பதிவு செய்யும் கலைஞர்கள் வாழ்கின்ற உலகம் இது
நீங்கள் பதிவு செய்தவையோ ஏராளம்!
கவிதைகளாய், சிறுகதைகளாய், குறு நாவல்களாய், நாவல்களாய், நாடகங்களாய், திரைப்படமாய் இப்படி, இப்படி எழுதுவதற்கு இன்னும்… இன்னும்…

எத்ததனயோ மேடைகள் கண்டீர்? எத்தனையோ நடிகர்களை உருவாக்கினீர்? இதில் பாடசாலை மாணவ, மாணவிகள்தான் அதிகம். இன்றும் எத்தனையோ கலைஞர்கள் உங்கள் படைப்புக்களை நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் „உலகம் உங்கள் கைகளிலே“ என்ற உங்களது நாடக நூல் இன்றும் பலரால் நடிக்கப்படுகின்றது.

பாரிஸில் G.P. பிலிம்சாரால் உருவாக்கப்பட்ட“தனிப்புறா“ என்ற திரைப்படத்தில் நீங்கள் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை பதிவு செய்து இன்றும் உங்களை நினைவு கூருகின்றோம்

இலங்கை வானொலியில் உங்கள் எழுத்திலும், குரலிலும் ஒலித்த நாடகங்களோ ஏராளம்!

உங்களது „நல்லதீர்ப்பு“ நாடகம்தான் எனது அரங்கேற்றமாக இருந்திருக்க வேண்டும் காலம் கை கொடுக்கவில்லை!

ஆனாலும் உங்களது „தாய்நாடு“ நாடகத்திலும் பின்னர் அது இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டபோது „கண்டியம்பதிக் காவலன்“ என பெயர் மாறிய போதும் அந் நாடகத்தில் உங்களோடு இணைந்து நடித்ததில் எனக்குப் பெருமையோ பெருமை.

அது மட்டுமல்ல „அகில இலங்கை நாடகப்பேரவை“ சார்பாக நாடகப் போட்டிகளுக்கு நடுவர்களாகப் போகும்போது தங்கள் அருகில் „கலைக்காவலர்“ சி.தர்மலிங்கம் மாஸ்ற்றர், அமரர் டானியல், „பல்கலைமணி“ தம்பிராசா போன்ற பெரியவர்கள் எல்லாம் அமர்ந்திருக்க உங்கள் அருகில் நானும் அமர்ந்திருந்தபோது நான் சிட்டுக்குருவிகளைப்போல வானத்தில் சிறகடித்தேன்…

„காத்திருப்பேன் உனக்காக“ காலமெல்லாம் பேசப்படும் திரைப்படம். அதில் எழுத்து, பாடல், நடிப்பு என நீங்கள் அளித்த பங்களிப்பு காலமெல்லாம் உங்கள் பெயரை பேசவைக்கும்.

பூதத்தம்பியாக நீங்கள் நடித்த வீடியோ திரைப்படம் ரூபவாகினியில் உங்கள் பெயரை பேசவைத்தது.

உங்களது முதல் நாவல் „முகை வெடித்த மொட்டு“ இலங்கை அரசின் சாகித்திய மண்ணடலப் பரிசினை வென்றது.

அதனை மறு பதிப்பு செய்து உங்களுக்கு காணிக்கையாக்க எண்ணியுள்ளோம் அது காணிக்கையல்ல? மரியாதை!

மனங்களில் மரணிக்காத ஒரு பெரும் கலைஞனின் மனதில் வாழ்ந்த பெருமையோடு என்றும்…
வண்ணைத் தெய்வம்.

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“

leave a reply